இனி காலை 9 மணிக்கே நூலகம் செல்லலாம்..!! சிங்கப்பூரில் 13 பொது நூலகங்களில் புதிய வசதி!

இனி காலை 9 மணிக்கே நூலகம் செல்லலாம்..!! சிங்கப்பூரில் 13 பொது நூலகங்களில் புதிய வசதி!

சிங்கப்பூரில் பொதுமக்கள் நூலகச் சேவைகளை அதிக நேரம் பயன்படுத்தும் வகையில், தேசிய நூலக வாரியம் (NLB) தனது பொது நூலகங்களில் காலை நேரச் சேவையை விரிவுபடுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள 13 பொது நூலகங்கள் காலை 9 மணி முதல் திறக்கப்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஏற்கெனவே ஹார்பர்ஃபிரண்ட், யீஷூன், கிளமெண்டி உள்ளிட்ட மூன்று நூலகங்களில் காலை 9 மணி திறப்பு நடைமுறையில் இருந்தது. இதனைத் தொடர்ந்து, அக்டோபர் 5ஆம் தேதி முதல் மேலும் எட்டு நூலகங்களில் இந்த வசதி விரிவுபடுத்தப்பட்டது.

இதன்படி, புக்கிட் பஞ்சாங், செம்பவாங், செராங்கூன், பாசிர் ரிஸ், பீஷான், பொங்கோல், தம்பனீஸ் மற்றும் உட்லண்ட்ஸ் ஆகிய நூலகங்களும் காலை 9 மணிக்குத் திறக்கப்படுகின்றன.

இதற்கு முன்பு சில நூலகங்கள் காலை 10 அல்லது 11 மணிக்கே திறக்கப்பட்டு வந்தன. புதிய மாற்றத்தின் மூலம் மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் மற்றும் காலை நேரத்தில் வாசிப்புப் பழக்கம் கொண்டவர்கள் நூலகங்களை முன்கூட்டியே பயன்படுத்த முடியும்.

காலை 9 மணி முதல் வழக்கமான பணியாளர் சேவைகள் தொடங்கும் நேரம் வரை, வாசகர்கள் புத்தகங்களைத் தேடுதல், தானியங்கி முறையில் புத்தகங்களைக் கடன் பெறுதல், கணினி மற்றும் இருக்கை முன்பதிவு வசதிகளைப் பயன்படுத்துதல் போன்ற சுயசேவை வசதிகளைப் பெறலாம்.

இந்தக் கூடுதல் நேரத்தில் நூலகத்திற்குள் நுழைய, உறுப்பினர் அட்டை, அடையாள அட்டை அல்லது NLB செயலியில் உள்ள மின்னணு அட்டையை நுழைவாயிலில் ஸ்கேன் செய்ய வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகள் இல்லாதவர்கள் ஒரு நாள் நுழைவுச் சீட்டைப் பெறும் வசதியும் உள்ளது.

இருப்பினும், நூலகப் பணியாளர்களின் நேரடி உதவி மற்றும் சேவைகள் வழக்கமான திறப்பு நேரத்திலேயே தொடங்கும். அதாவது, சம்பந்தப்பட்ட நூலகத்தின் பழைய அட்டவணைப்படி காலை 10 அல்லது 11 மணிக்குப் பணியாளர் சேவைகள் கிடைக்கும்.

பொதுமக்களின் தேவைகள், நூலகங்களின் செயல்பாட்டுச் சாத்தியக்கூறுகள் மற்றும் வணிக வளாகங்களின் திறப்பு நேரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்படுகிறது.

இந்த மாற்றத்தின் மூலம் சிங்கப்பூரில் நூலகங்களைப் பயன்படுத்துவோருக்கு கூடுதல் வசதியும், காலை நேரத்தில் அமைதியான சூழலில் வாசிக்கவும் படிக்கவும் அதிக வாய்ப்பும் கிடைக்கும்.