கிம் லிம்மின் நம்பிக்கையைப் பயன்படுத்தி மோசடி..! S$73,000 கைக்கடிகாரம் திருட்டு..முன்னாள் உதவியாளருக்கு 22 மாதங்கள் சிறை..!!

கிம் லிம்மின் நம்பிக்கையைப் பயன்படுத்தி மோசடி..! S$73,000 கைக்கடிகாரம் திருட்டு..முன்னாள் உதவியாளருக்கு 22 மாதங்கள் சிறை..!!

சிங்கப்பூர் கோடீஸ்வரர் பீட்டர் லிம்மின் மகளும், தொழிலதிபருமான கிம் லிம்மின் (Kim Lim) முன்னாள் தனிப்பட்ட உதவியாளருக்கு 22 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் கடன் அட்டையைத் தவறாகப் பயன்படுத்தியது, விலையுயர்ந்த கைக்கடிகாரம் மற்றும் பணத்தைத் திருடியது, அனுமதியின்றி கார் ஓட்டியது உள்ளிட்ட குற்றங்களுக்காக இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

33 வயதான டேய் ஜிங் வென் (Tey Jing Wen) என்பவருக்கு நவம்பர் 2ஆம் தேதி சிங்கப்பூர் நீதிமன்றம் 22 மாதங்கள் சிறைத் தண்டனையும், 3,500 வெள்ளி அபராதமும் விதித்தது. மேலும், சிறையிலிருந்து விடுதலையான நாளிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்டவும், எந்தவொரு வகை ஓட்டுநர் உரிமத்தையும் வைத்திருக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்தைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக 15 நாட்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.

டேய் ஜிங் வென், 2022ஆம் ஆண்டு கிம் லிம் நடத்தி வந்த KL Health தனியார் நிறுவனத்தில் மனிதவள உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். தனது பணியில் முன்னேற்றம் கண்ட அவர், குறுகிய காலத்திலேயே மனிதவள மேலாளராகவும் பின்னர் பிராந்திய ஒருங்கிணைப்பாளராகவும் பதவி உயர்வு பெற்றார்.

வெளிநாட்டு வணிக நடவடிக்கைகளைக் கண்காணிப்பது உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை அவர் கவனித்து வந்தார். இதனால் கிம் லிம்முடன் நெருக்கமாகப் பணியாற்றும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது.

கிம் லிம் தனது முன்னாள் உதவியாளரை முழுமையாக நம்பியிருந்ததால், அலுவலகப் பாதுகாப்புப் பெட்டகத்தின் ரகசியக் குறியீட்டையும் அவரிடம் பகிர்ந்துகொண்டார். பின்னர் அந்தக் குறியீட்டை கிம் லிம் மறந்துவிட்டதால், பாதுகாப்புப் பெட்டகத்தைத் திறக்கத் தெரிந்த ஒரே நபராக டேய் ஜிங் வென் இருந்துள்ளார்.

2025ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை, நிறுவனத்தின் கடன் அட்டையைப் பயன்படுத்தி எட்டு முறை இரவு விடுதிகளில் மொத்தம் 19,191 வெள்ளி செலவு செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இதற்கிடையில், அலுவலகப் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 73,000 வெள்ளி மதிப்புள்ள Patek Philippe ஆடம்பரக் கைக்கடிகாரமும், 8,000 வெள்ளி ரொக்கம் அடங்கிய சிவப்பு உறைகளும் காணாமல் போயிருந்தன.

விசாரணையில், அந்தப் பொருட்களை டேய் ஜிங் வென் திருடியிருப்பது தெரியவந்தது. பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தபோது, 73,000 வெள்ளி மதிப்புள்ள கைக்கடிகாரத்தை வெறும் 16,500 வெள்ளிக்கு இரண்டாம் கைப் பொருள் விற்பனையாளர் எனக் கூறிய ஒருவரிடம் விற்றுள்ளார்.

அந்தப் பணத்தில் ஒரு பகுதியைக் கொண்டு நிறுவனத்தின் கடன் அட்டையைத் தவறாகப் பயன்படுத்தியதன் மூலம் ஏற்பட்ட கடனைச் செலுத்தியுள்ளார். எஞ்சிய பணத்தையும், திருடப்பட்ட சிவப்பு உறைகளில் இருந்த பணத்தையும் தனது சொந்தச் செலவுகளுக்குப் பயன்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்தது.

இதற்கிடையில், 2025ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் தேதி கிம் லிம் சிங்கப்பூரில் இல்லாத நேரத்தில், அவருக்குச் சொந்தமான சொகுசுக் காரை அனுமதியின்றி எடுத்துச் சென்றுள்ளார்.

அடுத்த நாள் அதிகாலை, எதிர்திசையில் வாகனம் ஓட்டியதால் போக்குவரத்துக் காவல்துறையினரால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். அப்போது அவரிடம் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லை என்பதும், மது அருந்தியதற்கான மூச்சுப் பரிசோதனை அளவு அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறியிருந்ததும் கண்டறியப்பட்டது. மேலும், காருக்கு மூன்றாம் தரப்புக் காப்பீடும் இல்லாதது தெரியவந்தது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் கிம் லிம் நிறுவனத்தின் கணக்குகள் மற்றும் அலுவலகப் பொருட்கள் குறித்து விசாரணை மேற்கொண்டபோது, கடன் அட்டை முறைகேடு மற்றும் திருட்டுச் சம்பவங்களும் வெளிச்சத்துக்கு வந்தன.

இந்தச் சம்பவம் குறித்து கடந்த 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சமூக வலைத்தள நேரலை நிகழ்ச்சியில் பேசிய கிம் லிம், தன்னை நம்பிக்கையுடன் ஏமாற்றிய முன்னாள் உதவியாளரின் செயலால் மிகுந்த மனவேதனை அடைந்ததாகத் தெரிவித்திருந்தார்.

குறிப்பாக, தனது மகனுக்காக வைக்கப்பட்டிருந்த பணமும் திருடப்பட்டதை அறிந்தபோது மிகவும் வருத்தமடைந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். மற்றவர்களை எளிதில் நம்பிவிடுவதாகவும் தனது வேதனையை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த வழக்கில் ஐந்து குற்றச்சாட்டுகளை டேய் ஜிங் வென் அக்டோபர் 8ஆம் தேதி ஒப்புக்கொண்டிருந்தார். மேலும் ஐந்து குற்றச்சாட்டுகளும் தண்டனை விதிக்கும்போது நீதிமன்றத்தின் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதையடுத்து, தற்போது 22 மாதங்கள் சிறைத் தண்டனை, 3,500 வெள்ளி அபராதம் மற்றும் விடுதலையான பின்னர் இரண்டு ஆண்டுகள் வாகனம் ஓட்டத் தடை என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.