சிங்கப்பூரில் சாலைத் தூணில் மோதி தலைகீழாகக் கவிழ்ந்த கார்..!!ஓட்டுநருக்கு உதவிய இளைஞர்கள்!

சிங்கப்பூரின் மத்திய வர்த்தகப் பகுதியான Central Boulevard பகுதியில் இரண்டு கார்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு கார் சாலையோரத் தூணில் மோதி தலைகீழாகக் கவிழ்ந்த நிலையில், காருக்குள் சிக்கிய ஓட்டுநருக்கு அங்கிருந்த இளைஞர்கள் உதவிய சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
கடந்த அக்டோபர் 31ஆம் தேதி, அதிகாலை சுமார் 3:35 மணியளவில் Central Boulevard மற்றும் Marina View சந்திப்பில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
விபத்து நடந்த இடத்தில் கருப்பு நிறக் கார் ஒன்று சாலையோரத்தில் இருந்த தூணில் மோதி, அருகிலிருந்த பசுமைப் பகுதியில் தலைகீழாகக் கவிழ்ந்திருந்தது. காரின் முன்பகுதியும் குறிப்பிடத்தக்க அளவில் சேதமடைந்திருந்தது.
சம்பவ இடத்தில் இருந்த புகைப்படங்களின்படி, காருக்குள் ஓட்டுநர் சிக்கியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த குறைந்தது மூன்று இளைஞர்கள் ஒன்றிணைந்து காரின் கதவைத் திறந்து, ஓட்டுநர் வெளியேற உதவியுள்ளனர்.
இந்த விபத்தில் இரண்டு கார்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகச் சிங்கப்பூர் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். சம்பவ இடத்தில் இருந்த மற்றொரு வெள்ளை நிறக் காரின் முன்பக்க வலது பகுதியும் சேதமடைந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் தொடர்புடைய 40 வயதுடைய பெண் ஓட்டுநர் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அவரை சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், 33 வயதுடைய ஆண் ஓட்டுநர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாகச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு கார்கள் விபத்தில் சம்பந்தப்பட்டிருந்தாலும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாகச் சந்தேகிக்கப்படும் ஆண் ஓட்டுநர் எந்தக் காரை ஓட்டி வந்தார் என்பதை காவல்துறையினர் வெளியிடவில்லை.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விபத்தில் சிக்கிய ஓட்டுநருக்கு உதவ முன்வந்த இளைஞர்களின் மனிதநேயச் செயலும் கவனம் பெற்றுள்ளது.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
