S$3 பில்லியன் பணமோசடி வழக்கு...!! S$12.3 மில்லியன் மதிப்புள்ள 450 சொகுசுப் பொருட்கள் மீண்டும் ஏலம்!

சிங்கப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய S$3 பில்லியன் பணமோசடி வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட மேலும் 450 சொகுசுப் பொருட்கள் மீண்டும் ஏலத்திற்கு வரவுள்ளன. இந்த இரண்டாம் கட்ட ஏலத்தில் விலையுயர்ந்த வைர நகைகள், ஹெர்ம்ஸ் கைப்பைகள், பிரபல நிறுவனங்களின் கைக்கடிகாரங்கள் மற்றும் அரிய வகை மதுபானங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் இடம்பெறுகின்றன.
இந்த ஏலத்தில் இடம்பெறும் பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் S$8.9 மில்லியன் முதல் S$12.3 மில்லியன் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நவம்பர் 6ஆம் தேதி Hotlotz நிறுவனம் இந்த ஏலம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மொத்தம் 450 பொருட்கள் நான்கு தனித்தனி பிரிவுகளாக ஏலம் விடப்பட உள்ளன. இதில் 103 ஹெர்ம்ஸ் கைப்பைகள் மற்றும் அணிகலன்கள், 53 விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள், 106 அரிய வகை மதுபானங்கள் மற்றும் 188 உயர்தர நகைகள் இடம்பெறுகின்றன.
இந்த ஏலத்திற்கான ஆன்லைன் பதிவு நவம்பர் 9ஆம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்குகிறது.
ஏலத்தில் இடம்பெறும் பொருட்களில் ஜேட் கல் மற்றும் வைரங்கள் பதிக்கப்பட்ட பதக்க நெக்லஸ் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதன் மதிப்பு அதிகபட்சமாக S$400,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 12.88 காரட் எடை கொண்ட அடர் மஞ்சள் நிற வைரம் பதிக்கப்பட்ட மோதிரத்தின் மதிப்பு S$240,000 முதல் S$280,000 வரை இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
ஹெர்ம்ஸ் நிறுவனத்தின் அரிய வகை கைப்பைகளும் இந்த ஏலத்தில் முக்கிய இடம் பிடித்துள்ளன. 2021ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட முதலைத் தோலால் செய்யப்பட்ட Hermès Birkin 20 Faubourg Sous La Neige கைப்பையின் மதிப்பு S$200,000 முதல் S$300,000 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், வெள்ளை நிற இமயமலை முதலைத் தோலால் தயாரிக்கப்பட்ட மற்றொரு ஹெர்ம்ஸ் பிர்கின் கைப்பையின் மதிப்பு S$120,000 முதல் S$180,000 வரை இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
கைக்கடிகாரப் பிரிவில் 18 காரட் வெள்ளைத் தங்கத்தால் தயாரிக்கப்பட்ட Patek Philippe Nautilus Perpetual Calendar கைக்கடிகாரமும் இடம்பெறுகிறது. இதன் மதிப்பு S$185,000 முதல் S$250,000 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், உலகம் முழுவதும் வெறும் 200 பாட்டில்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட ஜப்பானின் புகழ்பெற்ற Yamazaki 55 Years Old விஸ்கியும் ஏலத்திற்கு வருகிறது. இதன் மதிப்பு S$250,000 முதல் S$300,000 வரை இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நான்கு பிரிவுகளுக்கான ஏலங்கள் வெவ்வேறு தேதிகளில் நிறைவடைய உள்ளன.
உயர்தர நகைகளுக்கான ஏலம் நவம்பர் 22ஆம் தேதியும், ஹெர்ம்ஸ் கைப்பைகள் மற்றும் அணிகலன்களுக்கான ஏலம் நவம்பர் 26ஆம் தேதியும், கைக்கடிகாரங்களுக்கான ஏலம் நவம்பர் 29ஆம் தேதியும் நிறைவடைகிறது. அரிய வகை மதுபானங்களுக்கான ஏலம் டிசம்பர் 1ஆம் தேதி நிறைவடைகிறது.
முதல் கட்ட ஏலத்தில் இடம்பெற்ற அனைத்து பொருட்களும் வெற்றிகரமாக விற்பனை செய்யப்பட்டதாக Hotlotz நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது நடைபெறவுள்ள ஏலமும் முழுமையாக ஆன்லைன் வழியாக நடைபெறுகிறது. உலகம் முழுவதும் உள்ள ஏலதாரர்கள் இதில் பங்கேற்கலாம்.
மேலும், மதுபானங்களைத் தவிர மற்ற பொருட்களைச் சிங்கப்பூரில் உள்ள Le Freeport பாதுகாப்பான சேமிப்பு நிலையத்தில் முன்பதிவு செய்து நேரில் பார்வையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
S$3 பில்லியன் பணமோசடி வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட விலையுயர்ந்த சொகுசுப் பொருட்கள் மீண்டும் ஏலத்திற்கு வருவது சிங்கப்பூரில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, பல லட்சம் வெள்ளி மதிப்புள்ள நகைகள், கைப்பைகள் மற்றும் அரிய கைக்கடிகாரங்கள் இந்த ஏலத்தின் முக்கிய ஈர்ப்பாக உள்ளன.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
