சிங்கப்பூரில் 3 நோயாளிகளுக்கு அதிகளவு கோடீன் மருந்து..!! மருத்துவருக்கு $20,000 அபராதம்..!!

சிங்கப்பூரில் மூன்று நோயாளிகளுக்கு ‘கோடீன்’ (Codeine) கலந்த இருமல் மருந்துகளை அளவுக்கு அதிகமாகவும், குறுகிய கால இடைவெளியிலும் பரிந்துரைத்த மருத்துவருக்கு $20,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தரமான மருத்துவச் சேவையை வழங்கத் தவறியதாகக் கூறி, சிங்கப்பூர் மருத்துவ மன்றத்தின் ஒழுங்குமுறைத் தீர்ப்பாயம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
தேபான் கார்டன் மருந்தகத்தில் மருத்துவராகப் பணியாற்றி வரும் டாக்டர் சியூ ஈ ஹெர்ன் கெவின், தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். கடந்த 2020ஆம் ஆண்டில் மூன்று நோயாளிகளுக்கும் ‘புரோமெடில்’, ‘ஃபெடாக் கோ சிரப்’, ‘கோபாடில்-ஈ’ ஆகிய கோடீன் கலந்த இருமல் மருந்துகளை அவர் குறுகிய இடைவெளியில் தொடர்ந்து வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் சுகாதார அமைச்சு கடந்த 1996ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய வழிகாட்டுதலின்படி, ஒருமுறை 240 மில்லிலிட்டருக்கு மேல் இத்தகைய மருந்துகளை வழங்கக் கூடாது. மேலும், நான்கு நாட்களுக்குள் மீண்டும் அதே மருந்தை வழங்குவதையும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த வழிகாட்டுதல்களை மருத்துவர் முறையாகப் பின்பற்றவில்லை என விசாரணையில் தெரியவந்தது.
மருந்துகளைப் பயன்படுத்திய மூன்று நோயாளிகளுக்கும் கடுமையான உடல்நலப் பாதிப்புகள் ஏற்படவில்லை என்றாலும், கோடீன் கலந்த இருமல் மருந்துகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் அதற்கு அடிமையாகும் ஆபத்து இருப்பதாகத் தீர்ப்பாயம் சுட்டிக்காட்டியது. அதுமட்டுமின்றி, அளவுக்கு அதிகமாக மருந்து உட்கொள்வதால் உயிரிழப்பு ஏற்படக்கூடிய அபாயமும் இருந்ததாகக் குறிப்பிட்டது.
இதற்கிடையில், நோயாளிகளில் ஒருவர் ஏற்கெனவே வழங்கப்பட்ட மருந்தைத் தொலைத்துவிட்டதாகக் கூறிய மருத்துவரின் விளக்கத்தையும் தீர்ப்பாயம் ஏற்கவில்லை. மருத்துவர்கள் மருந்துகளைப் பரிந்துரைக்கும்போது நோயாளிகளின் பாதுகாப்புக்கும், மருத்துவ வழிகாட்டுதல்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இதற்கு முன்னதாகவே, கடந்த 2021ஆம் ஆண்டில் சிங்கப்பூர் சுகாதார அறிவியல் ஆணையமும் இதே மருத்துவருக்கு $18,000 அபராதம் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது சிங்கப்பூர் மருத்துவ மன்ற ஒழுங்குமுறைத் தீர்ப்பாயம் அவருக்கு மேலும் $20,000 அபராதம் விதித்துள்ளது. இதனுடன் மருத்துவருக்குக் கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இனிமேல் இதுபோன்ற தவறுகளில் ஈடுபடமாட்டேன் என எழுத்துப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும், விசாரணைக்கான முழுச் செலவுகளையும் அவரே ஏற்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மருத்துவத் துறையில் நோயாளிகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது. குறிப்பாக, கோடீன் போன்ற அடிமையாக்கும் தன்மை கொண்ட மருந்துகளை மருத்துவர்கள் உரிய அளவிலும், முறையான இடைவெளியிலும் மட்டுமே பரிந்துரைக்க வேண்டும் என்பதன் அவசியத்தை இந்தத் தீர்ப்பு வலியுறுத்துகிறது.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
