சிங்கப்பூர் TADA வாடகை கார் சேவையில் சர்ச்சை..!! நெடுஞ்சாலையில் சிக்கிய பெண்ணுக்கு கிடைத்த அதிர்ச்சி அறிவுரை!!

சிங்கப்பூர் TADA வாடகை கார் சேவையில் சர்ச்சை..!! நெடுஞ்சாலையில் சிக்கிய பெண்ணுக்கு கிடைத்த அதிர்ச்சி அறிவுரை!!

சிங்கப்பூரில் நெடுஞ்சாலையில் தனியார் வாடகை கார் திடீரென பழுதடைந்த நிலையில், பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல காரில் இருந்து இறங்கி நடந்து செல்லுமாறு வாடிக்கையாளர் சேவை மையம் அறிவுறுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 36 வயதுப் பெண் பயணி, அந்த அறிவுரை தனது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் கூறி அதனை ஏற்க மறுத்துள்ளார்.

கடந்த நவம்பர் 23ஆம் தேதி திங்கட்கிழமை காலை சுமார் 8.55 மணியளவில், சிங்கப்பூரின் ஸ்டில் ரோடு சவுத் (Still Road South) பகுதியில் இருந்து மரைன் பரேட் மேம்பாலத்திற்குச் செல்லும் வழியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அன்று காலையில் 36 வயதான சென் என்ற பெண், வேலைக்குச் செல்வதற்காக TADA செயலி மூலம் தனியார் வாடகை காரை முன்பதிவு செய்துள்ளார். பயணம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென கார் பழுதடைந்து நடுவழியில் நின்றுவிட்டது.

இதையடுத்து, ஓட்டுநர் உடனடியாக TADA வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொள்ள முயன்றுள்ளார். ஆனால், காலை 9 மணிக்குத்தான் தொலைபேசி சேவை தொடங்கும் என்பதால் அவரால் தொடர்புகொள்ள முடியவில்லை. பின்னர், நிலப் போக்குவரத்து ஆணையத்திடமும் (LTA) உதவி கோரியுள்ளார்.

இதையடுத்து, அந்தப் பெண் காலை சுமார் 9 மணிக்கு TADA வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டுள்ளார். அப்போது அவருக்கு இரண்டு வழிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
காரில் இருந்து இறங்கி நடந்து சென்று பாதுகாப்பான இடத்தை அடைய வேண்டும்.

பயணத்தை ரத்து செய்துவிட்டு, தாங்களாகவே வேறொரு டாக்ஸியை முன்பதிவு செய்து, அந்த ஓட்டுநரிடம் பழுதடைந்த கார் இருக்கும் இடத்திற்கு வந்து அழைத்துச் செல்ல முடியுமா எனக் கேட்டுக்கொள்ள வேண்டும்.

ஆனால், நெடுஞ்சாலையில் இவ்வாறு நடந்து செல்வது பாதுகாப்பற்றது என்றும், இத்தகைய சூழலில் பயணிகளைப் பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளை நிறுவனம் எடுக்க வேண்டும் என்றும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

மேலும், வாடிக்கையாளர் சேவை மையத்தின் மேலாளரிடம் புகார் தெரிவிக்குமாறும் கேட்டுள்ளார். இருப்பினும், மேலாளரிடம் ஆலோசித்த பிறகும் அதே இரண்டு ஆலோசனைகளையே தொடர்ந்து வழங்கியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

சுமார் 44 நிமிடங்கள் தொலைபேசியில் பேசியும் எந்தவொரு நடைமுறை உதவியும் கிடைக்கவில்லை எனக் கூறியுள்ளார். இறுதியில், சம்பவ இடத்திற்கு இழுவை வாகனம் (Tow Truck) வந்ததையடுத்து அதில் ஏறி அங்கிருந்து சென்றுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அதே நாளில் நண்பகல் சுமார் 12.15 மணியளவில் TADA நிறுவனத்தின் பிரதிநிதி அந்தப் பெண்ணைத் தொடர்புகொண்டுள்ளார். வாடிக்கையாளர் சேவை மையத்துடனான உரையாடல் பதிவு ஆய்வு செய்யப்பட்டதாகவும், அப்போது வழங்கப்பட்ட ஆலோசனைகள் நிறுவனத்தின் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஏற்ப இல்லை என்பதை ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மணி நேரத்திற்குள் மின்னஞ்சல் மூலம் பதிலளிப்பதாகவும் உறுதியளித்துள்ளனர்.

ஆனால், பிற்பகல் 2.39 மணிக்கு வந்த மின்னஞ்சலில் தலா 10 வெள்ளி மதிப்புள்ள இரண்டு கூப்பன்கள் மட்டுமே வழங்கப்பட்டதாகப் பெண் தெரிவித்துள்ளார்.

மேலும், அவரது பயணத்திற்கான அசல் கட்டணம் 26.70 வெள்ளியாக இருந்த நிலையில், இலக்கை அடையாத பயணம் முடிக்கப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும், அப்போது கட்டணத் தொகை திரும்பப் பெறப்படுவது உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் சாதாரண வாடிக்கையாளர் புகாராகக் கருதப்படக் கூடாது என்றும், பயணிகளின் உயிர் பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் நிறுவனம் உரிய அவசர உதவியை வழங்கியிருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, நவம்பர் 23ஆம் தேதி நடைபெற்ற கார் பழுதடைந்த சம்பவம் குறித்து அறிந்துள்ளதாகவும், சம்பவத்தைக் கையாண்ட விதம் தொடர்பாக ஆய்வு செய்துள்ளதாகவும் TADA நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்குப் பயணக் கட்டணத்தை முழுமையாகத் திருப்பி வழங்கியதுடன், கூடுதலாக 20 வெள்ளி மதிப்புள்ள கூப்பன்களையும் வழங்கியுள்ளதாகக் கூறியுள்ளது.

அந்தச் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் வாடிக்கையாளர் சேவை மையத்தின் ஆலோசனைகள் போதுமானதாக இருக்கவில்லை என்பதையும் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

நெடுஞ்சாலையில் வாகனம் பழுதடைந்தால், முதலில் ஓட்டுநர் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், இதுபோன்ற சூழலில் நெடுஞ்சாலை கண்காணிப்பு மற்றும் ஆலோசனை அமைப்பான EMAS மீட்புச் சேவையைத் தொடர்புகொள்ள வேண்டும் என்றும் TADA தெரிவித்துள்ளது.

மேலும், பயணத்தை ரத்து செய்வதற்கும் கட்டணத்தைத் திருப்பி வழங்குவதற்கும் உதவி செய்யப்படும் என்றும், பாதுகாப்பான சூழல் ஏற்பட்ட பிறகு பயணிகள் மற்றொரு வாகனத்தை முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் விளக்கமளித்துள்ளது.

வாடிக்கையாளர் சேவை நடைமுறைகளை மேம்படுத்தி, இதுபோன்ற அவசரச் சூழல்களில் பயணிகளுக்கும் ஓட்டுநர்களுக்கும் தெளிவான மற்றும் பொருத்தமான வழிகாட்டுதல்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் TADA நிறுவனம் உறுதியளித்துள்ளது.