தொடர்ந்து 3 நாட்கள் வந்த எச்சரிக்கையைப் புறக்கணித்ததால் 1.4 லட்சம் பேரின் தகவல்கள் திருட்டு! சிங்கப்பூரில் நிறுவனத்துக்கு S$2.47 லட்சம் அபராதம்!


சிங்கப்பூரின் மிகப்பெரிய சட்ட நிறுவனங்களில் ஒன்றான ராஜா & டான் (Rajah & Tann Singapore), இணையப் பாதுகாப்பு எச்சரிக்கைகளை முறையாகக் கையாளத் தவறியதால், 1,43,756 பேரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளன. இதையடுத்து, அந்த நிறுவனத்துக்கு S$2,47,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. அப்போது, நிறுவனத்தின் இணையப் பாதுகாப்பைக் கண்காணித்து வந்த வெளிப்புற சேவை நிறுவனம், ஜூலை 24 முதல் 26ஆம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் சந்தேகத்திற்கிடமான இணையச் செயல்பாடுகள் குறித்து எச்சரிக்கை விடுத்தது.
ஆனால், நிறுவனத்தின் இணையப் பாதுகாப்பு மேலாளர் அந்த எச்சரிக்கைகளைத் தவறாகப் புரிந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. முதலில், நிறுவனத்தின் கணினி அமைப்புகளில் நடைபெற்று வந்த பாதுகாப்புச் சோதனைகளுடன் இந்த எச்சரிக்கைகள் தொடர்புடையவை என அவர் கருதினார்.
அடுத்தடுத்த நாட்களில், நிறுவனத்தின் தரவுகள் கிளவுட் சேமிப்பகத்துக்கு மாற்றப்படுவது குறித்தும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. ஆனால், அப்போது வழக்கமான தரவு காப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததால், அவற்றையும் தவறான எச்சரிக்கைகள் எனக் கருதி அவர் நடவடிக்கை எடுக்கவில்லை.
ஜூலை 27ஆம் தேதி, இணையப் பாதுகாப்புச் சேவை நிறுவனம் நேரடியாகத் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவரிடம் சாத்தியமான இணையத் தாக்குதல் குறித்து தெரிவித்த பிறகே இந்த விவகாரம் நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஹேக்கர்கள் வெளிநாட்டில் உள்ள தொடர்புடைய சட்ட நிறுவனத்தின் பயனர் கணக்கின் உள்நுழைவுத் தகவல்களைப் பயன்படுத்தி, பல அடுக்கு அங்கீகாரப் பாதுகாப்பையும் தாண்டி நிறுவனத்தின் கணினி அமைப்புக்குள் நுழைந்தது தெரியவந்தது. பின்னர், நிர்வாகக் கணக்கின் உள்நுழைவுத் தகவல்களையும் பெற்று, சேவையகத்தில் இருந்த தனிப்பட்ட தகவல்களைத் திருடியுள்ளனர்.
திருடப்பட்ட தகவல்களில் பெயர், வீட்டு முகவரி, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண், அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு எண் ஆகியவை அடங்கும். மேலும், சிலரின் வங்கிக் கணக்கு விவரங்கள், சம்பளம், கடன் விவரங்கள், ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் தகவல்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், திருடப்பட்ட தகவல்கள் டார்க் வெப் அல்லது இணையத்தில் வெளியிடப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை எனத் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக முதலில் S$3,17,000 அபராதம் விதிக்கத் திட்டமிடப்பட்டது. பின்னர், நிறுவனம் மேல்முறையீடு செய்ததையடுத்து, சம்பவத்திற்கு முன்பே மேற்கொண்டிருந்த இணையப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் திருடப்பட்ட தகவல்கள் பொதுவெளியில் வெளியிடப்படாதது உள்ளிட்ட அம்சங்கள் கருத்தில் கொள்ளப்பட்டன. இதன் அடிப்படையில் அபராதம் S$2,47,000ஆகக் குறைக்கப்பட்டது.
சம்பவத்திற்குப் பிறகு, நிறுவனம் பல அடுக்கு அங்கீகாரப் பாதுகாப்பை மேம்படுத்துதல், கணினி அமைப்புகளுக்கான அணுகல் கட்டுப்பாடுகளை இறுக்குதல் மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கைகளைக் கையாள்வதற்கான தெளிவான நடைமுறைகளை உருவாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இணையப் பாதுகாப்பு எச்சரிக்கைகளை உரிய நேரத்தில் கவனித்து நடவடிக்கை எடுக்கத் தவறினால், ஏராளமானோரின் தனிப்பட்ட தகவல்கள் ஆபத்தில் சிக்கக்கூடும் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK

