சிங்கப்பூரில் ஆன்லைன் ஷாப்பிங் மோசடி! 4 மணி நேரத்தில் சிக்கிய 21 வயது இளைஞர்..!!

சிங்கப்பூரில் ஆன்லைன் ஷாப்பிங் மோசடி! 4 மணி நேரத்தில் சிக்கிய 21 வயது இளைஞர்..!!

சிங்கப்பூரில் TikTok Shop மூலம் உணவுப் பொருட்களை ஆர்டர் செய்ய முயன்ற இருவரின் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி, சுமார் S$19,322.90 மோசடி செய்ததாகச் சந்தேகிக்கப்படும் 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது போலியான இணையதளத்திற்கு அழைத்துச் சென்று வங்கி அட்டை விவரங்களைப் பெற்று மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூரில் கடந்த நவம்பர் 27-ஆம் தேதி, இரண்டு நபர்கள் TikTok Shop தளத்தில் உணவுப் பொருட்களை வாங்க முயன்றுள்ளனர். அப்போது விற்பனையாளர் அவர்களை அடையாளம் தெரியாத வேறொரு இணையதளத்திற்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அந்த இணையதளத்தில் வங்கி அட்டை விவரங்களை உள்ளிடுமாறு கேட்கப்பட்டுள்ளது. இதனை நம்பி இருவரும் தங்களது வங்கி அட்டை விவரங்களைப் பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து, அவர்களது வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி அனுமதியின்றி பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன.

குறிப்பாக, சிங்கப்பூரின் ஆங் மோ கியோ அவென்யூ 8 மற்றும் பீப்பிள்ஸ் பார்க் காம்ப்ளக்ஸ் பகுதியில் உள்ள நகைக்கடைகளில் இந்தப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இருவரின் வங்கி அட்டைகளிலும் சேர்த்து மொத்தம் S$19,322.90 மதிப்பிலான (சுமார் ரூ.13 லட்சத்திற்கும் மேல்) அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன.

இந்த மோசடி தொடர்பாக நவம்பர் 27-ஆம் தேதி பிற்பகல் 3.20 மணி மற்றும் 4.25 மணியளவில் பாதிக்கப்பட்ட இருவரும் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து பெடோக் காவல் பிரிவு அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை மற்றும் கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளின் அடிப்படையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 21 வயது இளைஞரின் அடையாளத்தைக் கண்டறிந்தனர்.

முதல் புகார் கிடைத்த நான்கு மணி நேரத்திற்குள் அந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 21 வயது இளைஞர் மீது மோசடி செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக ஒரு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட உள்ளது.

இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது பிரம்படி அல்லது இவற்றில் ஒன்றுக்கும் மேற்பட்ட தண்டனைகள் விதிக்கப்படலாம்.

ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கும்போது அடையாளம் தெரியாத இணையதளங்களில் வங்கி அட்டை விவரங்களைப் பதிவு செய்ய வேண்டாம் என காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

வங்கி கணக்கு அல்லது அட்டையில் அனுமதியற்ற பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றிருப்பது தெரியவந்தால், உடனடியாக வங்கிக்குத் தகவல் தெரிவிப்பதுடன் காவல்துறையிலும் புகார் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆன்லைனில் பொருட்களை வாங்கும்போது சிறிய கவனக்குறைவும் பெரிய பண இழப்புக்கு வழிவகுக்கும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.