சிங்கப்பூர் 17 வயது சிறுவன் விமானத்தில் திடீர் மயக்கம்!! 30 நிமிடங்களில் உயிரைக் காப்பாற்றிய 2 மருத்துவர்கள்..!!


சிங்கப்பூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவர், சீனாவில் உள்நாட்டு விமானத்தில் பயணம் செய்தபோது திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே விமானத்தில் பயணம் செய்த இரண்டு மருத்துவர்கள் உடனடியாகச் செயல்பட்டு முதலுதவி அளித்ததால் சிறுவன் உயிர் தப்பியுள்ளார்.
கடந்த நவம்பர் 22ஆம் தேதி, சீனாவின் குன்மிங் நகரிலிருந்து சியாமென் நகருக்குச் சென்ற XiamenAir விமானத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விமானத்தில் பயணம் செய்த சிறுவனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவரது உதடுகள் வெளிறியதுடன், உடல் குளிர்ச்சியடைந்து, மற்றவர்கள் அழைத்தும் பதிலளிக்க முடியாமல் மயக்கமடைந்தார்.
இதையடுத்து விமானப் பணியாளர்கள் மருத்துவ உதவி கோரி அறிவிப்பு வெளியிட்டனர்.
அப்போது அதே விமானத்தில் பயணம் செய்த சியாமென் பல்கலைக்கழகத்தின் முதல் இணைப்பு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் கே ஜியான்குவோ மற்றும் ஹாங் சிங்சி ஆகியோர் உடனடியாகச் சிறுவனைப் பரிசோதித்தனர்.
சிறுவனுக்கு ரத்த அழுத்தம் குறைவாக இருந்ததுடன், தொப்புளைச் சுற்றிய பகுதியில் வயிற்றுவலியும் இருந்தது தெரியவந்தது. மேலும், விமானப் பயணத்திற்கு முந்தைய நாளும் பயணத்திற்கு முன்பும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாகச் சிறுவன் தெரிவித்தார்.
இதையடுத்து, கடுமையான குடல் மற்றும் வயிற்றுப் பாதிப்பு காரணமாக அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
சிறுவனுக்கு ஆக்சிஜன் வழங்கிய மருத்துவர்கள், நீரிழப்பைச் சரிசெய்ய உப்புக் கரைசலும் தேவையான மருந்துகளும் வழங்கினர்.
சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு சிறுவனின் ரத்த அழுத்தம் படிப்படியாகச் சீரானதுடன், வயிற்றுவலியும் குறைந்தது. அவர் மீண்டும் சுயநினைவுக்குத் திரும்பினார்.
விமானம் சியாமென் நகரில் தரையிறங்கிய பிறகும் மருத்துவர்கள் சிறுவனைத் தொடர்ந்து கண்காணித்தனர். இதயப் பாதிப்பு ஏதேனும் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த ECG பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்தனர்.
பரிசோதனையில் முடிவுகள் இயல்பாக இருந்ததுடன், சிறுவனின் உடல்நிலையும் சீராக இருந்தது உறுதிசெய்யப்பட்டது. அதன் பின்னரே மருத்துவர்கள் அங்கிருந்து சென்றனர்.
விமானத்தில் ஏற்பட்ட இக்கட்டான சூழலில் தக்க நேரத்தில் உதவி செய்து சிங்கப்பூர் சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய இரண்டு மருத்துவர்களின் செயல் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK

