மின்சார மிதிவண்டி பேட்டரியால் மீண்டும் விபத்து..?? கெய்லாங் HDB-யில் பரபரப்பு..!!
சிங்கப்பூர்: கெய்லாங் லோரோங் 26 இல் உள்ள காசா ஏரட்டா அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டிடத்தின் 7வது மாடியில் உள்ள ஒரு குடியிருப்பில் நேற்று ( ஜூன் 21) மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து காரணமாக குடியிருப்பில் இருந்த குடியிருப்பாளர்களைப் பாதுகாப்பு காரணங்கள் கருதி காவல்துறையினரும், குடிமைப் பாதுகாப்புப் படையினரும் வெளியேற்றினர்.
மின்சார மிதிவண்டி ஒன்று சார்ஜ் செய்யப்பட்டு கொண்டிருந்த நிலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து பிஷான் – டோவா பேயோ GRC நாடாளுமன்ற உறுப்பினர் சுவா யின் சியூ தனது முகநூல் பக்கத்தில், அபாய ஒலி மற்றும் அடர்த்தியான புகையைப் பின்தொடர்ந்து சென்று, தீயணைப்பு பம்ப் இணைப்பைக் கண்டறிந்த பிறகு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததாக பதிவிட்டிருந்தார்.
தீ விபத்து குறித்த காணொளியில், அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒன்றில் பெரிய தீ விபத்து ஏற்படுவதும் ஜன்னலில் இருந்து தீச்சுவாலைகள் வெளியேறுவதும் தெரிகிறது. மேலும் சம்பவ இடத்தில் பல தீயணைப்பு வாகனங்களும் காவல்துறை வாகனங்களும் இருந்தன.
காசா ஏரட்டா அடுக்குமாடி குடியிருப்பில் அமைந்துள்ள கெய்லாங் , லோரோங் 26, எண் 9 என்ற முகவரியில் மாலை சுமார் 5:35 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினருக்கு(SCDF) தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்பு படையினர் தீயணைப்பு குழாய்கள் மற்றும் அழுத்தப்பட்ட காற்று நுரைப் பைகளைப் பயன்படுத்தி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக வேற யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதை பாதுகாப்பு படையினர் உறுதி செய்துள்ளனர்.
மின்சார மிதிவண்டியில் ஏற்பட்ட மின் கோளாறால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இது போன்ற அபாயங்களை தடுப்பதற்காக தனி நபர் பயண சாதனங்கள் மற்றும் மின்சார மிதிவண்டிகளுக்கு அசல் அல்லாத மின்கலன்களை வாங்கவோ பயன்படுத்தவோ கூடாது எனவும் அவற்றை நீண்ட நேரத்திற்கோ அல்லது இரவு முழுவதுவோ சார்ஜ் செய்ய வேண்டாம் எனவும் SCDF பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.