சிங்கப்பூர் மருத்துவமனையில் ஏற்பட்ட தகராறு..!! காவல்துறை அதிகாரியின் ஆயுதத்தை பறித்த நபருக்கு சிறை..!!
சிங்கப்பூர்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது ஒரு நபருக்கு நகவெட்டி தர மறுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த அந்த நபர் காவல்துறை துணை அதிகாரியின் கைத்துப்பாக்கி பறித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.
அவ்வாறு அந்த நபர் செய்த குற்றத்திற்காக நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 17) அவருக்கு 30 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கோ சுவான் சோங் என்ற 42 வயதான அந்த நபர் சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருக்க முயன்ற குற்றசாட்டை ஒப்புக்கொண்டதன் பேரில் அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டுள்ள அந்த நபர் ஆகஸ்ட் 3ஆம் தேதி 2024 ஆம் ஆண்டு அன்று சாங்கி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஆனால் அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.
ஆகஸ்ட் 3 – ஆம் தேதி அன்று அந்த நபர் மருத்துவமனை ஊழியர்களிடம் நகவெட்டியை கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு அது வழங்க மறுக்கப்பட்டுள்ளது.
அடுத்த நாளும் இதே கோரிக்கையை ஊழியர்களிடம் வைத்த போது அப்போதும் அது மறுக்கப்பட்டுள்ளது. அதனால் கோபம் அடைந்த அந்த நபர் மருத்துவமனையின் துணை காவல் துறையினரிடம் உதவி கேட்டுள்ளார்.
அவருக்கு உதவ வந்த 2 துணை அதிகாரிகள் அவரது அறைக்கு வந்துள்ளனர். அப்போது ஒரு அதிகாரியின் துப்பாக்கியைத் திடீரென கையை நீட்டி அந்த நபர் பறிக்க முயன்றுள்ளார். அதை கவனித்த அந்த அதிகாரி நபரின் கையை தட்டி விட்டதால் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபரால் துப்பாக்கியை பறிக்க இயலவில்லை.
துணை காவல் அதிகாரி ஆயுதத்தை ஏன் பறிக்க முயன்றால் என்று அந்த நபரிடம் கேட்டபோது தனக்கு நகவெட்டி கிடைக்காததால் தற்கொலை எண்ணங்கள் ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.