சிங்கப்பூரில் நள்ளிரவில் பயங்கர தீ! ஒருவர் பலி..2 தீயணைப்பு வீரர்கள் ICU-வில்!
சிங்கப்பூர்: கிளமென்டி அவென்யூ 4-ல் உள்ள HDB குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 2 தீயணைப்பு வீரர்கள் உட்பட மொத்தம் 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
கிளமென்டி அவன்யூ 4-ல் உள்ள பிளாக் 309 இல் அடுக்குமாடிக் குடியிருப்பின் 8-வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்று (ஜூலை 31) இரவு சுமார் 11:10 மணி அளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு (SCDF) ப இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, 2 நீர்த்தாரைகளைப் பயன்படுத்தி வரவேற்பு அறையில் பரவியிருந்த தீயை அணைத்தனர்.
சமையலறையில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட நபர், உடனடியாக சிகிச்சைக்காக இங் டெங் ஃபான் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக அப்பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சிம் ஆன் உறுதிப்படுத்தியுள்ளார்.
தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தீக்காயங்களுக்கு உள்ளான 2 தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சிகிச்சைக்காக சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.