சிங்கப்பூர் கோயிலில் S$390 திருட்டு… 3 மணி நேரத்தில் சிக்கிய சந்தேக நபர்! எப்படி பிடிபட்டார்?
சிங்கப்பூரின் பெடோக் நார்த் அவென்யூ 3 பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் உண்டியல் பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 31ஆம் தேதி அதிகாலை 4.06 மணியளவில், கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்து காணிக்கைப் பெட்டிகளில் இருந்த பணம் திருடப்பட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இந்தச் சம்பவத்தில் மொத்தம் S$390 ரொக்கம் திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதையடுத்து, பெடோக் காவல் பிரிவு அதிகாரிகள் உடனடியாக விசாரணையைத் தொடங்கினர். CCTV காட்சிகள் மற்றும் காவல்துறை கேமராக்களின் பதிவுகள் உள்ளிட்டவற்றின் உதவியுடன் சந்தேக நபரின் அடையாளத்தை காவல்துறையினர் கண்டறிந்தனர்.
தகவல் கிடைத்த 3 மணி நேரத்திற்குள் 55 வயதுடைய ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து S$290 ரொக்கம் மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், ஆரம்பகட்ட விசாரணையில், இதே கோயிலில் முன்னதாக பதிவாகாத மேலும் இரண்டு அத்துமீறல் மற்றும் திருட்டுச் சம்பவங்களுடனும் இந்த நபருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அந்த இரண்டு சம்பவங்களில் மொத்தம் S$1,965 ரொக்கம் திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 55 வயது நபர் மீது அத்துமீறி நுழைந்து திருடிய குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட உள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, மேலும் பிரம்படி அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.
சிங்கப்பூர் காவல்துறையின் விரைவான விசாரணை மற்றும் CCTV, காவல்துறை கேமரா பதிவுகளின் உதவியால், புகார் அளிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.