சிறுமியின் தலையைத் தொட்ட 70 வயது முதியவர் மீது தாக்குதல்.? CCTV காட்சிகளால் பரபரப்பு..!!
சிங்கப்பூரின் ஈஸ்ட் கோஸ்ட் பகுதியில் உள்ள காபி ஷாப்பில் 70 வயது முதியவர் ஒருவர் சிறுமியின் தலையைத் தொட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 15ஆம் தேதி மாலை, தலாக் சாலை அருகே உள்ள ஈஸ்ட் கோஸ்ட் பகுதியில் அமைந்துள்ள காபி ஷாப்பில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலில் ஏற்பட்ட பழைய காயம் காரணமாக கைத்தடியின் உதவியுடன் மெதுவாக நடந்து சென்ற அந்த முதியவர், அங்கு அமர்ந்திருந்த சிறுமியைப் பார்த்து அன்பின் காரணமாக அவரது தலையை மென்மையாகத் தொட்டதாக கூறப்படுகிறது. இதைக் கண்ட சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து, சிறுமியின் தந்தைக்கும் முதியவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சுமார் 40 வயதுடைய அந்த நபர் முதியவரை தரையில் தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் முதியவருக்கு முதுகில் காயம் மற்றும் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட முதியவர் அந்தப் பகுதியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபலமான கடையை நடத்தி வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தரையில் விழுந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு முதியவருக்கு கடுமையான முதுகுவலி ஏற்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் வலி நிவாரணிகளை எடுத்துக்கொண்டு, பெரிய பிரச்சினையாக மாற்ற வேண்டாம் என அவர் நினைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் வலி தொடர்ந்து நீடித்ததால், குடும்பத்தினர் வற்புறுத்தி அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முழுமையான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வைத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்களை முதியவரின் குடும்பத்தினர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். முதியவரைத் தள்ளிய நபர் பின்னர் அவரிடம் மன்னிப்பு கேட்டதுடன், குடிப்பதற்காக ஒரு பானத்தையும் வாங்கிக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
எனினும், “ஒரு மன்னிப்பும் ஒரு பானமும் தனது தந்தைக்கு ஏற்பட்ட உடல் வலியையும் காயத்தையும் மாற்றிவிடாது” என முதியவரின் மகன் சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், முதியவரின் குடும்பத்தினர் சம்பவம் தொடர்பாக சிங்கப்பூர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். காபி ஷாப்பில் பதிவானதாக கூறப்படும் CCTV காட்சிகளும் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன.
சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் சுமார் 40 வயதுடைய நபரை காவல்துறை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
மேலும், சம்பவம் தொடர்பாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் மற்றும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும், உண்மைகளை கண்டறிவதற்கான விசாரணைக்கு பொதுமக்கள் ஒத்துழைக்குமாறும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.