சிங்கப்பூர்- மலேசியா இடையே சட்டவிரோத பயணச் சேவைகள்..!! 14 பேர் கைது..!!
சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும் இடையே அதிகாரப்பூர்வ உரிமம் இன்றி சட்டவிரோத பயணச் சேவைகள் நிகழ்ந்துள்ளது.
இது தொடர்பாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) மற்றும் குடிவரவு சோதனை சாவடிகள் ஆணையம் (ICA) இணைந்து உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் ஆகிய இரு நிலவழி எல்லைச் சோதனைச் சாவாடைகளிலும் அதிரடி சோதனைகள் மேற்கொண்டன.
அந்த சோதனையில் அதிகாரப்பூர்வ உரிமம் இன்றி சட்டவிரோதப் பயணச் சேவைகளை மேற்கொண்ட குற்றத்திற்காக 14 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த செய்தியை போக்குவரத்து மூத்த துணை அமைச்சரான சுன் ஷுவேலிங் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கடந்த மே 4 ஆம் தேதி அன்று அங்கீகரிக்கப்பட்ட டாக்ஸிகள் சிங்கப்பூரின் எல்லா பகுதிகளிலும் மலேசியாவின் ஜோகூர மாநிலத்தின் பல பகுதிகளிலும் பயணிகளை இறக்கி விட அனுமதிக்கும் வகையில் புதிய மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்த சூழலில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், உள்நாட்டு போக்குவரத்து ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் இந்த அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இதுவரை 3900 மேற்பட்ட வாகனங்கள் மீது இந்த அமலாக்க சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் விதிமுறைகளை மீறிய 199 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விரைவில் ஜூன் மாதம் பள்ளி விடுமுறை காலம் தொடங்கப்பட உள்ளது. பொதுமக்கள் தங்களது பயணங்களின் போது அதிகாரப்பூர்வ உரிமம் பெற்ற போக்குவரத்து நிறுவனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.