சிங்கப்பூர் செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..! Arrival Card-ல் புதிய வசதிகள்..!!
சிங்கப்பூருக்கு வரும் பயணிகளுக்கான SG Arrival Card (SGAC) முறையில் புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. பயணிகள் தங்களது வருகை விவரங்களைச் சமர்ப்பிக்கும் நடைமுறையை மேலும் எளிமையாக்கும் வகையில், புதிய தோற்றத்துடன் மேம்படுத்தப்பட்ட SG Arrival Card அறிமுகம் செய்யப்படுகிறது.
புதிய SG Arrival Card முறையில் பயணிகளுக்கு 19 மொழிகளில் படிவத்தைப் பூர்த்தி செய்யும் வசதி வழங்கப்பட உள்ளது. இதன் மூலம், ஆங்கிலத்தில் தகவல்களை நிரப்புவதில் சிரமம் ஏற்படும் பயணிகளும் தங்களுக்கு வசதியான மொழியைத் தேர்வு செய்து தேவையான விவரங்களை எளிதாகச் சமர்ப்பிக்க முடியும்.
மேலும், பயணிகளின் தகவல்களை உள்ளிடும் செயல்முறையை விரைவுபடுத்தும் வகையில் Passport-ஐ scan செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்படுகிறது. Passport-ஐ scan செய்த பிறகு, அதில் உள்ள சில அடிப்படை தகவல்கள் தானாகவே படிவத்தில் நிரப்பப்படும். இதனால் பயணிகள் ஒவ்வொரு தகவலையும் தனித்தனியாக உள்ளிட வேண்டிய தேவை குறையும்.
இந்த புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட SG Arrival Card வசதிகள் MyICA செயலி மற்றும் ICA இணையதளம் வழியாக வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் சிங்கப்பூருக்கு வருவதற்கு முன்பே பயணிகள் தங்களது வருகை தொடர்பான தகவல்களை எளிதாகச் சமர்ப்பிக்க முடியும்.
புதிய SG Arrival Card-ன் மாற்றியமைக்கப்பட்ட வடிவமைப்பு மற்றும் புதிய அம்சங்களை பயணிகள் ஆகஸ்ட் 26, 2026 முதல் பயன்படுத்திப் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூருக்குள் நுழையும் பெரும்பாலான வெளிநாட்டு பயணிகள், தங்களது வருகைக்கு முன்பாக SG Arrival Card-ஐ சமர்ப்பிப்பது கட்டாயம். இதில் பயணிகளின் தனிப்பட்ட தகவல்கள், பயண விவரங்கள் மற்றும் சுகாதாரத் தொடர்பான தேவையான தகவல்கள் இடம்பெறும்.
புதிய முறையில் மொழித் தேர்வு மற்றும் Passport scan போன்ற வசதிகள் சேர்க்கப்படுவதால், சிங்கப்பூருக்கு வரும் பயணிகளுக்கான முன்பதிவு மற்றும் நுழைவு நடைமுறை மேலும் எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயணிகள் ICA-வின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது MyICA செயலி மூலமாக மட்டுமே SG Arrival Card-ஐ சமர்ப்பிக்க வேண்டும். SG Arrival Card சமர்ப்பிப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது.