சிங்கப்பூர் தேவாலயத்தில் பாதிரியாருக்கு கத்திக்குத்து..! குற்றவாளிக்கு 4 ஆண்டுகள் சிறை..!!

சிங்கப்பூர் தேவாலயத்தில் பாதிரியாருக்கு கத்திக்குத்து..! குற்றவாளிக்கு 4 ஆண்டுகள் சிறை..!!

சிங்கப்பூரில் செயின்ட் ஜோசஃப் தேவாலயத்தில் திருப்பலி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பாதிரியாரை கத்தியால் குத்திய நபருக்கு 4 ஆண்டுகள் 3 மாதங்கள் சிறைத்தண்டனையும், 9 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.

2024ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம், தேவாலயத்தில் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் நடந்தது. தற்போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 38 வயதான பஸ்நாயக்க கீத் ஸ்பென்சர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2024 நவம்பர் 9ஆம் தேதி, புக்கிட் திமா பகுதியில் உள்ள செயின் ஜோசப் தேவாலயத்தில் (St Joseph’s Church) குழந்தைகளுக்கான சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அன்றைய நிகழ்ச்சியில் சுமார் 900 பேர் கலந்துகொண்டிருந்தனர்.

அன்று மாலை சுமார் 6.30 மணியளவில், பாதிரியார் கிறிஸ்டோபர் லீ (வயது 57) பக்தர்களுக்கு அருள் வழங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது ஸ்பென்சர், மற்றொரு பாதிரியாரிடம் அருள் பெறுவதற்காக வரிசையில் நின்றிருந்த நிலையில், திடீரென தனது வரிசையை மாற்றி பாதிரியார் லீயிடம் சென்றுள்ளார்.

அவரது முறை வந்தபோது, ஸ்பெசர் தன்னிடம் வைத்திருந்த மடிக்கக்கூடிய கத்தியை எடுத்து, பாதிரியாரின் வாயில் குத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த தாக்குதலில் பாதிரியாருக்கு வாயின் அடிப்பகுதி, நாக்கு மற்றும் உதட்டுப் பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

அவரது நாக்கில் சுமார் 8 செ.மீ. நீளமான காயமும், மேல் உதட்டில் 3 செ.மீ. காயமும், வாயின் ஓரத்தில் 4 செ.மீ. காயமும் ஏற்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தாக்குதலுக்கு ம நாட்களுக்குப் பிறகு அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். தொடர்ந்து மருத்துவ சிகிச்சை மற்றும் பேச்சுப் பயிற்சியும் அவருக்கு தேவைப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குப் பிறகு என்ன நடந்தது?
பாதிரியார் தாக்கப்பட்ட உடனே, தேவாலயத்தில் இருந்த சிலர் தலையிட்டு ஸ்பென்சரை கட்டுப்படுத்தினர். அவர்களில் ஓய்வில் இருந்த ஒரு காவல்துறை அதிகாரியும் இருந்தார்.

பின்னர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து அவரைக் கைது செய்தனர்.

ஸ்பென்சரிடம் பயன்படுத்தப்பட்ட மடிக்கக்கூடிய கத்தியுடன் மேலும் பல ஆயுதங்களும் இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அவற்றில் பட்டாம்பூச்சி கத்தி, பென்கத்தி, மீன் பிடிக்கும் கூர்மையான கொக்கி பொருத்தப்பட்ட கம்பி மற்றும் சுத்தியல் ஆகியவையும் அடங்கும்.

ஸ்பென்சர், பாதிரியாருக்கு ஆபத்தான ஆயுதத்தைப் பயன்படுத்தி கடுமையான காயம் ஏற்படுத்திய குற்றத்தையும், சட்டபூர்வமான காரணமின்றி பொது இடத்தில் ஆயுதங்களை வைத்திருந்த குற்றத்தையும் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து நீதிமன்றம் அவருக்கு 4 ஆண்டுகள் 3 மாதங்கள் சிறைதண்டனையும், 9 பிறம்படிகளும் விதித்துள்ளது.

நீதிபதி, இந்த தாக்குதல் எந்தவித தூண்டுதலும் இல்லாமல் நடத்தப்பட்டதாகவும், பாதுகாப்பற்ற நிலையில் இருந்த பாதிரியாருக்கு கடுமையான உடல் காயத்தை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், புனித சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதால், அங்கு பெரும் பதற்றமும் மக்கள் மத்தியில் அச்சமும் ஏற்படக்கூடிய சூழல் உருவாகியதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

இந்த சம்பவம் தேவாலயத்தில் இருந்த பக்தர்களை மட்டுமல்லாமல், சிங்கப்பூர் முழுவதும் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

குழந்தைகளுக்கான திருப்பலி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் பாதிரியார் மீது நடத்தப்பட்ட இந்த திடீர் தாக்குதல், வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பு குறித்த கவலையையும் ஏற்படுத்தியது.

சம்பவத்துக்குப் பின்னர் சிங்கப்பூர் காவல்துறை வழிபாட்டுத் தலங்களில் ரோந்து நடவடிக்கைகளை அதிகரித்தது.

இந்த வழக்கில் வழங்கப்பட்டுள்ள தண்டனை, வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் கூடும் இடங்களிலும் வன்முறைக்கு இடமில்லை என்பதையும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல்கள் கடுமையாகக் கருதப்படும் என்பதையும் உணர்த்துகிறது.