புவாங்கோக் HDB வீட்டில் நள்ளிரவில் பயங்கர தீ..! முதியவர் மருத்துவமனையில் அனுமதி..!!

புவாங்கோக் HDB வீட்டில் நள்ளிரவில் பயங்கர தீ..! முதியவர் மருத்துவமனையில் அனுமதி..!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் புவாங்கோக் கிரசென்ட்டில் உள்ள HDB குடியிருப்பு ஒன்றில் நேற்று (ஆகஸ்ட் 20) அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்து முதியவர் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

புவாங்கோக் கிரசென்ட்டில் உள்ள ளாக் 979B-ன் இரண்டாவது தளத்தில் அமைந்துள்ள வீட்டில் அதிகாலை 12.25 மணியளவில் தீ ஏற்பட்டதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) உறுதி செய்துள்ளது.

வீட்டின் படுக்கையறையில் இருந்த பொருள்கள் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தன. அங்கிருந்த தண்ணீர்க் குழாயைப் பயன்படுத்தி SCDF வீரர்கள் தீயை அணைத்தனர்.

தீச்சம்பவத்தின்போது ஒருவர் காயமடைந்த நிலையில் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.


அங் மோ கியோ நாடாளுமன்ற உறுப்பினர் விக்டர் லாய் இச்சம்பவம் குறித்து கூறியதாவது, அந்த முதியவரின் கால்களில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டிருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்த பின்னர் அவர் மீண்டும் வீடு திரும்பியுள்ளார். தீச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு உதவிய தொழில்நுட்பக் கல்விக் கழக (ITE) மாணவர் ஒருவருக்கும் விக்டர் லாய் நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் முதியவர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அதிர்ஷ்டவசமாக சிகிச்சைக்குப் பின்னர் அவர் வீடு திரும்பியுள்ளார். சில நொடிகளில் உயிரையே பறிக்கக்கூடிய தீ விபத்துகளில், ஒவ்வொரு நிமிடமும் மிக முக்கியம் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் நினைவூட்டியுள்ளது.