இந்திய மரபுடைமை நிலையத்தில் கலைகட்டும் பொங்கல் திருவிழா..!!!

இந்திய மரபுடைமை நிலையத்தில் கலைகட்டும் பொங்கல் திருவிழா..!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் இந்த ஆண்டின் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இந்திய மரபுடைமை நிலையம் கலாசாரமும் பாரம்பரியமும் நிறைந்த பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.ஜனவரி 10, 11, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சிகள், தைத்திருநாளின் உணர்வை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பொங்கலின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் கலாசார நிகழ்ச்சிகள், கைவினைப் பொருள் பயிலரங்குகள் மற்றும் நாட்டுப்புற கிராம சூழலை அனுபவிக்கச் செய்யும் ஏற்பாடுகள் இதில் இடம்பெறுகின்றன. ஜனவரி 10ஆம் தேதி நடைபெறும் புள்ளிக் கோலம் பயிலரங்கில், பங்கேற்பாளர்கள் பாரம்பரிய அரிசி சார்ந்த பொருட்களைப் பயன்படுத்தி தங்களுக்கென புள்ளிக் கோல வடிவங்களை உருவாக்கலாம். சமூக ஊடகங்களில் பிரபலமான கோலம், ரங்கோலி கலைஞர் ஜீவா இந்தப் பயிலரங்கை வழிநடத்துகிறார். இதில் பங்கேற்க ஒருவருக்கு S$10 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதே நாளில் பொங்கல் மரபுடைமைப் பாதை நடை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. லிட்டில் இந்தியா வழியாக நடந்து சென்று, பொங்கலுக்கான வணிகத் தயாரிப்புகள் மற்றும் பண்டிகைக்காலச் சூழலை பங்கேற்பாளர்கள் காணலாம். இந்த நடை நிகழ்ச்சி ஆனந்தபவன் உணவகத்தில் கிராமிய பாணியிலான சைவ வாழை இலை மதிய உணவுடன் நிறைவடைகிறது. இதற்கான கட்டணம் ஒருவருக்கு S$30 வெள்ளி ஆகும்.

சிறுவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியாக, ‘மொங்கல் திருடிய பொங்கல்’ எனும் கதை சொல்லும் அங்கம் காலை 11 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறுகிறது. பொங்கல் பண்டிகையின் மரபும் மகிழ்ச்சியும் பெற்றோர் மற்றும் பிள்ளைகள் இணைந்து அறிந்து கொள்ளும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. இதை நூல் ஆசிரியர் அபி கிருஷ் வழிநடத்துகிறார். ஒரு பெற்றோர்–பிள்ளை பங்கேற்க கட்டணமாக S$20 வசூலிக்கப்படுகிறது.

ஜனவரி 11ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை தஞ்சாவூர் ஓவியப் பயிலரங்கும் நடைபெறுகிறது. மிளிரும் வண்ணங்களும் தங்கப் படலங்களும் கொண்ட தஞ்சை ஓவியக் கலையை அறிந்து கொள்ளும் இந்த பயிலரங்கில், பங்கேற்பாளர்கள் தாங்களே உருவாக்கிய ஓவியத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். இதற்கான கட்டணம் S$25 ஆகும்.

கட்டணம் செலுத்த வேண்டிய நிகழ்ச்சிகளுடன் சேர்த்து, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பல இலவச நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய நாட்களில் பொங்கல் பண்டிகைச் சந்தை, மண்பானை செய்யும் நேரடி அங்கம் மற்றும் பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை பொங்கல் தயாரிக்கும் நிகழ்ச்சி இடம்பெறுகிறது.


நான்கு நாள்கள் நடைபெறும் இந்த பொங்கல் கொண்டாட்டங்களில் கலாசார நிகழ்ச்சிகள், சிறார்களுக்கான விளையாட்டுகள், கைவினைப் பொருள் தயாரிப்பு அங்கங்கள் மற்றும் இலவச தின்பண்டங்கள் வழங்கப்படவுள்ளன. கால்நடை பொம்மை உருவாக்குதல், பொங்கல் சாவிக்கொத்து செய்தல், வண்ணம் தீட்டுதல் போன்ற செயல்பாடுகளிலும் பொதுமக்கள் பங்கேற்கலாம்.

இந்திய மரபுடைமை நிலையத்தில் நடைபெறும் 2026ஆம் ஆண்டுக்கான பொங்கல் கொண்டாட்டங்கள் குறித்த கூடுதல் தகவல்களை ihc-programmes.peatix.com என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK