சிங்கப்பூர்:சிங்கப்பூரில் வாகன உரிமம் பெற விரும்புவோருக்கான பயிற்சியை வழங்கும் சிங்கப்பூர் சேஃப்டி டிரைவிங் சென்டர், 2028ஆம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் நவீன ஓட்டுநர் பயிற்சிப் பாதையை அறிமுகம் செய்யவுள்ளது.
‘இன்டெலிஜென்ட் டிரைவிங் சர்க்யூட்’ என அழைக்கப்படும் இந்த அமைப்பில், பயிற்சியாளர் வாகனத்திற்குள் பயிற்றுவிப்பாளர் அருகில் அமர்ந்திருக்காமல் பயிற்சி பெற முடியும். இந்த கட்டமைப்பு பயிற்சியாளரின் ஓட்டுநர் திறனை கேமராக்கள் மற்றும் உணர்கருவிகள் மூலம் கண்காணித்து, அவசரநிலை ஏற்பட்டால் தொலைவிலிருந்து வாகனத்தை நிறுத்தும் வசதியையும் கொண்டுள்ளது.
கார், மோட்டார்சைக்கிள் மற்றும் கனரக வாகனங்களுக்கான பயிற்சிகள் இதில் மேற்கொள்ள முடியும். இந்த வசதி, 2030ஆம் ஆண்டு சுவா சூ காங்கில் அமையவுள்ள புதிய ஓட்டுநர் பயிற்சி நிலையத்திலும் நடைமுறைப்படுத்தப்படும்.
பயிற்சிப் பாதையில் பயிற்றுவிப்பாளர் தேவையில்லை என்றாலும், செய்முறை ஓட்டுநர் தேர்வின்போது தேர்வாளர் உடனிருக்கும் நடைமுறை தொடரும். ஜப்பானிய நிறுவனமான ஹோண்டா உருவாக்கிய இந்த அமைப்பு, ஓட்டும் முறையில் ஏற்படும் சிறிய மாற்றங்களையும் கண்டறியும் திறன் கொண்டதாக உள்ளது.