சிங்கப்பூரில் சுங்க அதிகாரிகளிடம் சிக்கிய பயணி!!சாங்கி விமான நிலையத்தில் அதிரடி சோதனை..!!

சிங்கப்பூரில் சுங்க அதிகாரிகளிடம் சிக்கிய பயணி!!சாங்கி விமான நிலையத்தில் அதிரடி சோதனை..!!

சிங்கப்பூரில் சாங்கி விமான நிலையத்தில் சுமார் S$`400,000 மதிப்புள்ள ஒன் பீஸ் (One Piece) டிரேடிங் கார்டுகளை அறிவிக்காமல் கொண்டு வந்த 31 வயது சிங்கப்பூர் நபர் ஒருவர் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார். இந்தச் சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை (2ஆம் தேதி) சாங்கி விமான நிலையத்தின் டெர்மினல் 4-க்கு வந்திறங்கிய அந்த நபரை, குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் (ICA) அதிகாரிகள் உடமைகளைச் சோதனையிடும் பகுதிக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினர். அப்போது, அவரிடம் அறிவிக்க வேண்டிய பொருட்கள் ஏதேனும் உள்ளதா என்று அதிகாரிகள் கேட்டுள்ளனர். அதற்கு அவர் தன்னிடம் இரண்டு டிரேடிங் கார்டுகள் மட்டுமே இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஆனால், அவரது பதிலில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவருடைய உடமைகளைத் தீவிரமாகச் சோதனையிட்டனர். அப்போது, அவர் வைத்திருந்த பைகளில் ஒன்றில் அசாதாரணமான பொருட்கள் இருப்பதைக் கவனித்தனர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அந்தப் பைக்குள் சுமார் S`$400,000 மதிப்புள்ள 105 ஒன் பீஸ் டிரேடிங் கார்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அந்தப் பையில் ஓர் ஆடம்பர பிராண்டின் கைக்காப்பும் இருந்தது.

இதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் அந்தப் பொருட்களைக் கைப்பற்றி, சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தினர். இந்த விவகாரம் தொடர்பான மேலதிக விசாரணைக்காக வழக்கு சிங்கப்பூர் சுங்கத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் பயணிகள் புதிதாக வாங்கிய பொருட்களைக் கொண்டு வரும்போது, அவற்றின் மொத்த மதிப்பு அனுமதிக்கப்பட்ட வரி விலக்கு அல்லது சரக்கு மற்றும் சேவை வரி (GST) விலக்கு வரம்பை மீறினால், அவற்றைக் கட்டாயம் அறிவிக்க வேண்டும் என்று ICA நினைவூட்டியுள்ளது. மேலும், விதிகளின்படி செலுத்த வேண்டிய வரிகளையும் பயணிகள் முறையாகச் செலுத்த வேண்டும்.

குறிப்பாக, தாங்கள் கொண்டு வரும் பொருட்களுக்கு வரி செலுத்த வேண்டுமா அல்லது அவற்றை அறிவிக்க வேண்டுமா என்பதில் சந்தேகம் இருந்தால், பயணிகள் பச்சை வழித்தடத்தைத் தவிர்த்து, சிவப்பு வழித்தடத்தைப் பயன்படுத்த வேண்டும். அல்லது சுங்கத் துறையின் வரி செலுத்தும் அலுவலகத்தை அணுகி உரிய விளக்கங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வர்த்தக நடவடிக்கைகளுக்கும், மக்களின் சுமூகமான பயணத்திற்கும் தொடர்ந்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதுடன், சிங்கப்பூரின் எல்லைப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக ICA தெரிவித்துள்ளது. பயணிகள் சுங்க விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி, தேவையான பொருட்களை உரிய முறையில் அறிவிப்பதன் மூலம் இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்க்க முடியும்.