சிங்கப்பூர் டாசன் பகுதியில் வரவிருக்கும் பிரம்மாண்ட மாற்றங்கள் என்னென்ன..?? LTA வின் புதிய திட்டம்..!!
சிங்கப்பூர் : குயின்ஸ்டவுன் (Queenstown) மற்றும் டாசன் (Dawson) குடியிருப்புப் பகுதியைச் சுற்றியுள்ள சாலை வலையமைப்பை மேம்படுத்துவதற்கும், பூங்கா இணைப்புகளை வலுப்படுத்துவதற்குமான புதிய ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) அறிவித்துள்ளது.
இந்தத் திட்டம் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் போக்குவரத்து இணைப்பை எளிதாக்குவதோடு, குடியிருப்பாளர்களின் நடமாட்டத்தையும் கணிசமாக மேற்படுத்த உதவும்.
இந்த முக்கிய வடிவமைப்பு மற்றும் கட்டுமானத் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை $90.6 மில்லியன் மதிப்பில் பிரபல சிவில் பொறியியல் நிறுவனமான OKP Holdings நிறுவனத்தின் துணை நிறுவனம் வென்றுள்ளது.
டாசன் சாலை மற்றும் குவீன்ஸ்வே ஆகியவற்றுக்கு இடையே கே சியாங் சாலையின் ஒரு புதிய பகுதி நீட்டிக்கப்படும்.
கே சியாங் (டாங்கின் சாலை முதல் டால்சன் சாலை வரை) மற்றும் டாங்லின் சாலையின் சில பகுதிகள் (மார்க்கெட் டிரைவ் முதல் கே சியாங் சாலை வரை) தற்போதுள்ள இருவழி ஒற்றைப் பாதையிலிருந்து இருவழி இரட்டைப் பாதையாக அகலப்படுத்தப்படும்.
அலெக்ஸாண்ட்ரா நீர்வழிப் பாதையையும் அதைச் சுற்றியுள்ள பூங்காக்களையும் இணைக்கும் வகையில்,கே சியாங் சாலையின் ஓரமாகப் பிரத்யேக 2.2 கிலோமீட்டர் நீளத்திற்கு மிதிவண்டிப் பாதைகள் அமைக்கப்படும்.
மேலும் பொதுமக்களின் வசதிக்காக 3 புதிய பேருந்து நிறுத்தங்கள் உருவாக்கப்படுவதுடன், தற்போது இருக்கும் 8 பேருந்து நிறுத்தங்கள் மிகவும் வசதியான இடங்களுக்கு மாற்றியமைக்கப்பட உள்ளது.
இந்த மேம்பாட்டுப் பணிகள் அனைத்தும் 2026 ஆம் ஆண்டின் பின்பகுதியில் படிப்படியாகத் தொடங்கப்பட்டு, 2030ஆம் ஆண்டிற்குள் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாசன் பகுதியில் எதிர்கால வளர்ச்சியை மனதில் கொண்டு, மிகவும் பாதுகாப்பான மற்றும் எளிதில் அணுகக்கூடியப் போக்குவரத்து உள்கட்டமைப்பை உருவாக்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.
கட்டுமானக் காலத்தின் போது அப்பகுதி குடியிருப்பாளர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களைக் குறைக்கவும், தூசி மற்றும் சத்தக் கட்டுப்பாடுகளைக் கண்காணிக்கவும் LTA உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.