சிங்கப்பூரில் 23 நகைகளுடன் சிக்கிய பெண்..!! S$11,400 அபராதம்…என்ன நடந்தது..?

சிங்கப்பூரில் 23 நகைகளுடன் சிக்கிய பெண்..!! S$11,400 அபராதம்...என்ன நடந்தது..?

சிங்கப்பூர்: சிங்கப்பூருக்குள் மலேசியாவில் இருந்து நகைகளை கொண்டு வந்தபோது, அவற்றை முறையாக அறிவிக்காமல் GST ஏய்த்த 32 வயது பெண்ணுக்கு S$11,400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நபிலா பின்தி ஜஃபார் அல்-கதிரி (Nabilah Binte Jaafar Al-Kathiri) என்ற அந்தப் பெண், மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்குள் நுழைந்தபோது, தன்னிடம் அறிவிக்க வேண்டிய பொருட்கள் எதுவும் இல்லை என அதிகாரிகளிடம் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

2026 ஏப்ரல் 5ஆம் தேதி மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட காரில் வூட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக அவர் சிங்கப்பூருக்குள் வந்துள்ளார்.

அப்போது காரை அதிகாரிகள் சோதனையிட்டபோது, பின்புறப் பகுதியில் இருந்த ஒரு பையில் 22 பொட்டலங்களுக்குள் 23 நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றில், 21 தங்க நகைகள் மற்றும்
2 டைட்டானியம் நகைகள் என மொத்தம் 23 நகைகள் இருந்தன.

 

இந்த நகைகளின் மொத்த மதிப்பு சுமார் S$10,512 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் செலுத்த வேண்டிய GST தொகை சுமார் S$946 ஆகும்.

விசாரணையில், அந்தப் பெண் மலேசியாவில் வசித்து வந்ததுடன், சிங்கப்பூர் வாடிக்கையாளர்களுக்கு தங்கம் மற்றும் டைட்டானியம் நகைகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

அவர் Facebook மற்றும் Telegram போன்ற தளங்களில் நகைகளை விளம்பரப்படுத்தி, மலேசியாவில் உள்ள பல்வேறு கடைகளில் இருந்து நகைகளை வாங்கி சிங்கப்பூருக்குள் கொண்டு வந்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

கைப்பற்றப்பட்ட 23 நகைகளில் 19 நகைகள் லாபத்திற்காக விற்பனை செய்யப்பட இருந்தவைஎன்றும், மீதமுள்ள நகைகள் தனிப்பட்ட பரிசுகளுக்காக கொண்டுவரப்பட்டவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

GST ஏய்ப்பு தொடர்பான குற்றச்சாட்டை அந்தப் பெண் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவருக்கு S$11,400 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், விற்பனைக்காக வைத்திருந்த 19 நகைகள் உட்பட சம்பவத்துடன் தொடர்புடைய பொருட்கள் மற்றும் பைகள், பெட்டிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

சிங்கப்பூர் Customs விதிகளின்படி, சுங்கவரி அல்லது GST-ஐ திட்டமிட்டு ஏய்ப்பது கடுமையான குற்றமாகும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஏய்க்கப்பட்ட தொகையின் 20 மடங்கு வரை அபராதம் அல்லது 12 மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

சிங்கப்பூருக்குள் நகைகள் உள்ளிட்ட வரி செலுத்த வேண்டிய பொருட்களை கொண்டு வரும் பயணிகள், அவற்றை முறையாக அறிவித்து தேவையான GST மற்றும் சுங்க வரிகளை செலுத்த வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.