வேலைக்குச் சேர்ந்த 2 மாதங்களிலேயே கைவரிசை..! முதலாளி வீட்டில் S$14,949 மதிப்பிலான பொருட்கள் திருட்டு!

வேலைக்குச் சேர்ந்த 2 மாதங்களிலேயே கைவரிசை..! முதலாளி வீட்டில் S$14,949 மதிப்பிலான பொருட்கள் திருட்டு!

சிங்கப்பூரில் வீட்டு வேலைக்குச் சேர்ந்த இரண்டு மாதங்களிலேயே முதலாளியின் வீட்டில் திருட்டில் ஈடுபட்ட இந்தோனேசியப் பணிப்பெண்ணுக்கு ஆறு மாதங்கள் மற்றும் இரண்டு வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

32 வயதான சுலாஸ்திரி (Sulastri) என்ற அந்தப் பணிப்பெண், சிங்கப்பூரில் உள்ள வெஸ்ட்வுட் டெரஸ் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் கடந்த ஜூன் மாதம் வேலைக்குச் சேர்ந்தார். அவருக்கு மாதம் S$700 சம்பளமாக வழங்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அந்த வீட்டின் உரிமையாளரின் 27 வயது மகளுக்குச் சொந்தமான நகைகள், கைப்பேசி, காதுக்கருவி மற்றும் ரொக்கம் உள்ளிட்ட பொருட்களை அவர் திருடியுள்ளார்.

விசாரணையின்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் வீட்டைச் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, முதலாளியின் மகளுடைய அறையில் இருந்த கைப்பேசி மற்றும் காதுக்கருவியைப் பார்த்துள்ளார். இதையடுத்து, அவற்றில் ஒன்றான காதுக்கருவியைத் திருடியுள்ளார்.

பின்னர், அந்தப் பெண்ணின் அறையில் இருந்த பூட்டப்பட்ட இழுப்பறையைத் திறப்பதற்கான சாவியையும் கண்டுபிடித்துள்ளார். அதன் மூலம் இழுப்பறையில் வைக்கப்பட்டிருந்த நகைகளைப் பார்த்துள்ளார்.

அக்டோபர் மாதத்தின் நடுப்பகுதியில் அந்த நகைகளில் சிலவற்றைத் திருடியுள்ளார்.

அக்டோபர் 14ஆம் தேதி, முதலாளியின் மகள் தனது கைப்பையில் வைத்திருந்த S$150 பணத்தைக் காணவில்லை என்பதைக் கவனித்துள்ளார். மறுநாள் பணிப்பெண்ணிடம் விசாரித்தபோது, பணத்தை எடுத்ததை அவர் ஒப்புக்கொண்டதுடன், அந்தத் தொகையையும் திருப்பிக் கொடுத்துள்ளார்.

அக்டோபர் 19ஆம் தேதி, முதலாளியின் மகள் தனது பூட்டப்பட்ட இழுப்பறையில் இருந்த நகைகளைச் சரிபார்த்தபோது, சில நகைகள் காணாமல் போயிருப்பதைக் கண்டறிந்தார். இதையடுத்து, அவரது கணவர் காவல்துறையில் புகார் அளித்தார்.

விசாரணையில், மொத்தம் 11 நகைகள், ஒரு ஜோடி காதுக்கருவி, ஒரு கைப்பேசி மற்றும் ரொக்கம் என மொத்தம் S$14,949.42 மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

திருடப்பட்ட பொருட்களில் சில மீட்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டன. இருப்பினும், சுமார் S$10,240 மதிப்பிலான தங்க வளையல், தங்கச் சங்கிலி மற்றும் தங்கக் காதணிகள் இன்னும் மீட்கப்படவில்லை.

வழக்கில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட பணிப்பெண், தாம் ஒரு தனித்தாயாக இருப்பதாகவும், தனது குழந்தைகள் இன்னும் படித்து வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும், குடும்பத்தின் ஒரே வருமானம் ஈட்டுபவர் தாம்தான் என்பதால், தனக்குக் குறைவான தண்டனை வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.

இருப்பினும், திருட்டுக் குற்றத்தை ஒப்புக்கொண்ட அவருக்கு நீதிமன்றம் ஆறு மாதங்கள் மற்றும் இரண்டு வாரங்கள் சிறைத்தண்டனை விதித்தது.