SCDF - ன் புதிய "SG Alert "அமைப்பு..!! மே மாதம் முதல் சோதனை ஆரம்பம்..!!
சிங்கப்பூர் : SG Alert என்ற அமைப்பை சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படை (SCDF) அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் சோதனையானது மே மாதம் முதல் தொடங்க உள்ளது.
SCDF, வீட்டு தொழில் நுட்ப பணியகம், தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் மற்றும் சிங்க்டெல் ஆகியவை இணைந்து இந்த புதிய எச்சரிக்கை அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
மொபைல் டேட்டாவைப் பயன்படுத்தாமலும், தனிப்பட்ட தகவல்களை சேகரிக்காமலும் எச்சரிக்கைகளை அனுப்ப, தகவல் தொடர்பு ஒளிபரப்பு அமைப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
இந்த SGAlert திட்டத்திமானது, சிங்கப்பூரின் அவசர கால தகவல் தொடர்பு கட்டமைப்பை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நாட்டின் தற்போதைய அவசரகால தகவல் தொடர்புத் தளத்தை மேம்படுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளதாக SCDF தெரிவித்துள்ளது.
SG Alert அமைப்பு இயங்குவதற்கு மொபைல் டேட்டா சேவைகளை சார்ந்திருக்காமலும், சிக்னல் பலவீனமாக இருக்கும் போதும் அல்லது அதிகபட்ச பயன்பாட்டு நேரங்களில் கூட செய்திகளை அனுப்பும் வகையில் இந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் எச்சரிக்கை செய்திகளைப் பெறுவதை உறுதி செய்ய, தங்களது கைபேசிகளில் சமீபத்திய இயங்கு தளத்தை (OS) பதிவிறக்கம் செய்ய வேண்டும். இதற்கு கூடுதல் கைபேசி செயல்களோ அல்லது கணக்குப் பதிவுகளோ தேவையில்லை.
இதில் எச்சரிக்கை அறிவிப்பு ஆங்கிலத்திலும், பயனாளர்களின் தொலைபேசியில் அமைக்கப்பட்ட மொழிகளிலும் அனுப்பப்படும்.பயனாளர்களின் தொலைபேசி மொழி 4 உள்ளூர் மொழிகளில் ஒன்றாக இல்லை என்றால் அறிவிப்பு ஆங்கிலத்தில் இடம்பெறும்.
மே 10- ஆம் தேதி அன்று மதியம் 12 மணிக்கு சிங்க்டெல் பயனாளர்களுக்கு இந்த சோதனை தொடங்க உள்ளது.
SCDF இந்த எச்சரிக்கை அமைப்பை இந்த ஆண்டின் இறுதிக்குள் ஸ்டார்க் ஹப் பயனாளர்களுக்கும், 2027 ஆம் ஆண்டு நடுப்பகுதிக்குள் M1 மற்றும் சிம்பா பயனாளர்களுக்கும் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
நாடு தழுவிய பொது சோதனை குறித்த தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என்று SCDF தெரிவித்துள்ளது.