சிங்கப்பூரில் PayNow விதிகள் மாற்றம்..!!என்ன மாறுகிறது? மக்கள் என்ன சொல்கிறார்கள்?
சிங்கப்பூரில் Pay Now முறையில் கட்டணம் செலுத்தும் விதிமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதற்கு மக்களிடையே இரு வேறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகின்றன.
ஜூன் 6 ஆம் தேதி முதல் PayNow மூலம் பணம் அனுப்புவோர் அல்லது பெற்றுக் கொள்வோர் தங்களுக்கு பிடித்த மாற்று பெயரைக் கொண்டு அடையாளப்படுத்திக் கொள்ள முடியாது. அது போல பிறரின் மாற்றுப் பெயர்களைப் பார்க்கவும் இயலாது.
இந்த புதிய நடவடிக்கையானது ஆள்மாறாட்ட மோசடிகளில் இருந்து தங்களை பாதுகாக்கும் என்பது சிலரின் கருத்தாக உள்ளது.
அதேவேளை வாடிக்கையாளர்களிடம் மாற்றுப் பெயர்களால் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் இருப்பவர்கள் இதற்கு தங்களது கவலைகளைத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக நீக்குப்போக்கான ஏற்பாடுகளுடன் ஒப்பந்தமின்றி வேலை செய்வோர், சொந்த தொழில் செய்பவர்கள் ஆகியோருக்கு இது பொருந்தும்.
புதிய விதிமுறைகள் வாடிக்கையாளர்களைக் குழப்பக் கூடும் என்று அவர்கள் கவலைப்படுகின்றனர். 30% PayNow பயனர்கள் மாற்றுப் பெயர்களைக் கொண்டு தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.
ஆனால் வரும் ஜூன் 6 ஆம் தேதி முதல் அந்த பெயரைப் பயன்படுத்த முடியாது. அதற்கு பதிலாக சம்பந்தப்பட்ட வங்கி கணக்கில் பதிவு செய்யப்பட்ட பெயரின் பாதி காண்பிக்கப்படும்.அந்த பெயரின் சில எழுத்துக்களுக்கு பதிலாக X என்று காண்பிக்கப்படும்.
மாற்றுப் பெயரை பயன்படுத்தாத மீதி உள்ள 70% பயனர்கள் பெயர்களும் பாதி மறைக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக Chan Shi Hui Jacqueline என்ற பெயர் ChXX shX HuX JacquXXXXX என்று காண்பிக்கப்படும். பெயரில் எந்த எழுத்துக்கள் மறைக்க வேண்டும் என்று பயனார்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியாது.
இந்த புதிய விதிமுறையானது மோசடிகளைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் வங்கிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சரியாக செயல்பட்டு வரும் வர்த்தகங்கள், நண்பர்கள், அரசாங்க அமைப்புகள், குடும்பத்தார் ஆகிய தரப்பினரை ஏமாற்றிப் பணம் பறிக்க மோசடிக்காரர்கள் மாற்றுப் பெயர்களைப் பயன்படுத்தியதே இந்த புதிய விதிமுறைகளுக்கு காரணம் என்று கூறியுள்ளது.
அந்த வகையில் மாற்றுப் பெயரைப் பயன்படுத்த வகை செய்யும் செய்யும் அம்சத்தை அகற்றுவதன் மூலம் மோசடிக்காரர்கள் தவறானப் பெயரை பயன்படுத்த மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.