புக்கிட் திமா பகுதியில் காரை அதிவேகமாகவும் ஆபத்தான முறையிலும் ஓட்டிச் சென்று பள்ளி பேருந்து மீது மோதி விபத்து ஏற்படுத்திய குற்றத்திற்காக 29 வயது நபர் மீது நீதிமன்றத்தில் இன்று (ஜூன் (8) குற்றம் சாட்டப்பட உள்ளது.
2024 ஆம் ஆண்டு மார்ச் 6-ஆம் தேதியன்று அதிகாலை 6:00 மணி அளவில் காவெனாக் சாலையில் கார் ஒன்று போக்குவரத்து திசைக்கு எதிர் திசையில் சென்று கொண்டிருப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள், காரை நிறுத்தாமல் மணிக்கு 114 கிலோ மீட்டர் வேகத்தில் மற்ற வாகனங்களுக்கு இடையே ஆபத்தான முறையில் சென்ற அந்தக் காரை கவனித்தனர்.
அவ்வாறு சென்றதில் புக்கிட் திமா சாலை மற்றும் 6th அவென்யூ சந்திப்பில் சிவப்பு விளக்கு சமிக்ஞையையும் மீறி சென்ற அந்த கார், அங்கே யூ டன் செய்து கொண்டு இருந்த ஒரு தனியார் பள்ளி பேருந்தின் மீது பலமாக மோதியது.
மோதிய வேகத்தில் இடது புறமாக பாய்ந்த அந்த கார், அங்குள்ள விளக்கு கம்பத்தில் மோதி புல்வெளியில் நின்று தீப்பற்றி எரிந்தது. காரில் இருந்த ஓட்டுநரும் 3 பயணிகளும் உடனடியாக வெளியேறி உயிர் தப்பி உள்ளனர்.
இந்த விபத்தின் போது பள்ளி பேருந்தில் 4 மாணவர்கள் இருந்துள்ளனர். அவர்களில் 8 மற்றும் 9 வயதுடைய இரு மாணவர்கள், காரின் ஓட்டுநர் மற்றும் 3 பயணிகள் உட்பட மொத்தம் 6 பேர் சுயநினைவுடன் சிகிச்சைக்காக தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
காவல்துறையின் விசாரணைக்குப் பிறகு அந்த கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்த நபர் 2019- ஆம் ஆண்டிலும் மது அருந்துவிட்டு மற்றவர்கள் பாதுகாப்பை பற்றி சிறுதும் சிந்திக்காமல் வாகனம் ஓட்டியது காரணமாக அவர் குற்றவாளி என நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்க பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.