சிறையில் இருந்து வெளியே வந்த சில நாட்களில்..!! மீண்டும் நீதிமன்றம் சென்ற மிதிவண்டி ஓட்டுநர்..!!
சிங்கப்பூரில் புங்கோல் (Punggol) பகுதியில் பேருந்தை வழிமறித்து ஓட்டுநருடன் சண்டையிட்ட 49 வயது மிதிவண்டி ஓட்டுநர் சியா மெங் சியாங் தனக்கு விதிக்கப்பட்ட 7 நாட்கள் குறுகிய காலத் தடுப்புக் காவலுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சியா பொதுச்சாலையில் திடீரென வழித்தடம் மாறி பேருந்தின் முன்னே வந்துள்ளார்.
மோதலைத் தவிர்ப்பதற்காக பேருந்து ஓட்டுநர் அவசர தடைகளைப் பயன்படுத்தி சுமார் 10 வினாடிகள் தொடர்ந்து ஒளி எழுப்பியுள்ளார்.
இதனால் கோபமடைந்த சியா, தனது மிதிவண்டியைப் பேருந்தின் முன்னால் நிறுத்தி வழிமறித்து உள்ளார். பின்னர் பேருந்துக்குள் ஏறி ஓட்டுநரின் கைப்பேசியைப் பறிக்க முயற்சித்தார்.
கைபேசியைப் பறிக்க முயன்றதால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுநர் கொங் ஹெங் சுவென், சியாவின் கழுத்தைப் பிடித்து பேருந்திலிருந்து கீழே தள்ளி உள்ளார்.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான கைகலப்பில், சியாவிற்கு விலா எழும்பு முறிவும் (Fractured Rib), பேருந்து ஓட்டுநரின் கட்டைவிரலில் சுளுக்கும் ஏற்பட்டது.
வேண்டுமென்றே காயப்படுத்தியக் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட ஓட்டுநர் கொங்கிற்கு, கடந்த மார்ச் மாதம் 7 நாட்கள் குறுகிய காலத் தடுப்புக் காவல் விதிக்கப்பட்டது.
சியா தன் மீதான பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த குற்றச்சாட்டை மறுத்து தற்காப்பிற்காகவே சண்டையிட்டதாக வாதிட்டார். எனினும் அவர்தான் சண்டையைத் தொடங்கி தீவிரப்படுத்தினார் என்று கூறி நீதிமன்றம் அவருக்கும் 7 நாட்கள் குறுகிய காலத் தடுப்புக் காவல் விதித்திருந்தது.
குறுகிய காலத் தடுப்புக் காவல் (SDO) என்பது குற்றப் பின்னணிப் பதிவை ஏற்படுத்தாத ஒரு சமுதாயத் தண்டனை என்றபோதிலும், சியா தனது 7 நாள் தண்டனை காலத்தை முழுமையாக அனுபவித்து முடித்துள்ளார்.
இருப்பினும் தனது தண்டனையையும் குற்றச்சாட்டையையும் முழுமையாக ரத்து செய்யக்கோரி, சிறையில் இருந்து விடுதலையான சில நாட்களிலேயே அவர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். எனவே இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெற உள்ளது.