சாங்கி விமான நிலையத்தில் 6 கடைகளில் திருட்டு..!! பிரிட்டிஷ் நபர் கைது..!!

சாங்கி விமான நிலையத்தில் 6 கடைகளில் திருட்டு..!! பிரிட்டிஷ் நபர் கைது..!!

சிங்கப்பூர்: சாங்கி விமான நிலையத்தின் போக்குவரத்துப் பகுதியில் உள்ள பல கடைகளில் தொடர் திருட்டுகளில் ஈடுபட்ட குற்றத்திற்காக 56 வயது பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஜூலை 16ஆம் தேதி அன்று இரவு 9:22 மணி அளவில் சாங்கி விமான நிலைய முனையம் 3ல் உள்ள காஸ்மெட்டிக்ஸ் & பெர்ஃபியூம்ஸ் (The Shilla Cosmetics & Perfumes) கடையில் இருந்த ஷெனல் காட்சிப் பலகையில் இருந்து ஒரு பொருள் காணாமல் போனதை ஊழியர்கள் கவனித்துள்ளனர்.

அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த நபர் பொருளை எடுத்துக்கொண்டு பணம் செலுத்தாமல் வெளியேறியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து விமான நிலைய காவல்துறையினர் அந்த நபரின் அடையாளத்தைக் கண்டறிந்து, அவர் தனது விமானத்தில் ஏறி சிங்கப்பூரை விட்டு புறப்படுவதற்கு முன்பாகவே போக்குவரத்து பகுதியில் வைத்து அவசர கைது செய்துள்ளனர்.

 

அவர் முனையம் 2 மற்றும் 3 -ல் உள்ள மேலும் 5 கடைகளிலும் திருடியிருப்பது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வாசனைத் திரவியங்கள், சாவிக் கொத்துகள், மற்றும் கைகாப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை அவரிடம் இருந்து காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

 

அந்த நபர் திருடிய பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் $1200 என மதிப்பிடப்பட்டுள்ளது.

அந்த நபர் மீது நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 18) அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு செய்யப்பட உள்ளது. சிங்கப்பூர் சட்டப்படி, குடியிருப்பு அல்லது வணிக வளாகத்தில் திருடிய குற்றத்திற்காக அவருக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்பட வாய்ப்புள்ளது.