சிங்கப்பூரில் சட்டவிரோதமாக தங்கியவர்களுக்கு உதவி..! சிங்கப்பூரர்கள் உட்பட 4 பேர் மீது ICA வழக்கு..!
சிங்கப்பூரில் முறையான ஆவணங்களின்றி சட்ட விரோதமாக தங்கி இருந்த குடியேற்றக் குற்றவாளிகளுக்கு அடைக்கலமும் வேலையும் வழங்கியதாக 3 சிங்கப்பூரர்கள் மற்றும் 1 இந்தியர் உட்பட 4 பேர் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் குடிநுழைவுச் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) ஜூலை 30ஆம் தேதி அன்று இந்த அதிரடி சட்ட நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் விவரங்கள் பின்வருமாறு: 1. தாமஸ் லீ கும் சுவென் (வயது 58) மற்றும் ஃபூ செர் ஃபாட் (வயது 76)-சிங்கப்பூரர்கள்: சியாவ் ஷுஃபாங் என்ற சீன பெண்ணின் வேலை அனுமதி அட்டை C (Work Permit) கடந்த 2013 ஆம் ஆண்டு காலாவதி ஆகிவிட்டது. அதாவது அவர் 13 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கப்பூரில் சட்டவிரோதமாக தங்கி இருந்துள்ளார்.
அந்தப் பெண்ணை தாமஸ் லீ பகுதிநேர துப்புரவாளராக வேலைக்கு அமர்த்தியுள்ளார். முதியவரான ஆன ஃபூ செர் புக்கிட் பத்தோக் பகுதியில் உள்ள தனது வீட்டில் அந்த பெண்ணுக்கு பல ஆண்டுகளாக அடைக்கலம் தந்துள்ளார். அந்த சீன பெண்ணுக்கு தற்போது 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2.யான் முன் வாய் (வயது 51)-சிங்கப்பூரர்: லைலானி ராகாசா அலாக் என்ற பிலிப்பைன்ஸ் பெண்ணின் விசிட் பாஸ் 2012 -ல் காலாவதி ஆகியுள்ளது. அந்த பெண் சட்ட விரோதமாக தங்கி இருப்பதை சரி பார்க்காமல், 2018 ஆண்டு முதல் தனது டெக் வாய் லேன் வீட்டில் அடைக்கலம் கொடுத்ததற்காக யார் முன் வாய் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கு தற்போது 6 மாத சிறையும், $2,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
3.துரைராஜ் சிங்கமுத்து (வயது 34) இந்திய குடிமகன்: இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒரே வெளிநாட்டவர் இவர்தான்.
கிருஷ்ணகுமார் ரவி என்ற மற்றொரு இந்தியரின் விசிட் பாஸ் ஆகஸ்ட் 2025 இல் காலாவதியான பிறகும், அவரை தனது டெலிவரி உதவியாளராக துரைராஜ் வேலைக்கு சேர்த்துக் கொண்டுள்ளார்.
எந்த ஒரு சரிபார்ப்புகளும் இல்லாமல் சட்ட விரோதமாக வேலை வழங்கியதற்காக, இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய கிருஷ்ணகுமாருக்கு ஏற்கனவே 6 வார சிறை தண்டனையும், 3 பிரம்படிகளும் விதிக்கப்பட்டு, நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.
சிங்கப்பூரில் குடியேற்ற குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தருவதும், வேலை தருவதும் மிகக் கடுமையான குற்றங்களாக கருதப்படுகிறது.
சட்ட விரோதமாக வேலை வழங்கும் குற்றத்திற்காக 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் $6,000 வரை அபராதம் வழங்கப்படும். தெரிந்தோ அல்லது கவனக்குறைவாகவோ அடைக்கலம் கொடுத்தால் கூட 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் $6,000 அபராதம் விதிக்கப்படலாம்.