கிளமென்டி HDB தீ விபத்து..!!உயிரிழப்புக்குப் பின்னால் வெளிவந்த அதிர்ச்சி காரணம்..!

கிளமென்டி HDB தீ விபத்து..!!உயிரிழப்புக்குப் பின்னால் வெளிவந்த அதிர்ச்சி காரணம்..!

சிங்கப்பூர்: கிளமென்டி அவென்யூ 4, பிளாக் 309-இல் உள்ள HDB குடியிருப்பின் 8-வது மாடியில் கடந்த ஜூலை 31-ஆம் தேதி இரவு சுமார் 11:00 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட 2 சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படை (SCDF) தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர்.

விசாரணையில், கட்டிடத்தின் உலர் பிரதான தீயணைப்புக் குழாயில் (Dry Riser) ஏற்பட்ட கோளாறு காரணமாக தீயை அணைக்கும் பணியில் சிரமம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதனால், தீயணைப்பு வாகனத்திலிருந்து 8வது மாடி வரை குழாய்களை படிக்கட்டுகள் வழியாக நேரடியாக இழுத்துச் சென்று தீயை கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக SCDF தெரிவித்துள்ளது.

பொதுவாக, தீ விபத்து நேரங்களில் உலர் பிரதான குழாய் வழியாக தீயணைப்பு வாகனத்திலிருந்து தண்ணீர் மேல்தளங்களுக்கு அனுப்பப்படும். ஆனால், இந்தச் சம்பவத்தில் குழாயின் ஒரு பகுதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக போதுமான நீர் அழுத்தம் கிடைக்கவில்லை. இதனால் அந்த அமைப்பைப் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து, SCDF வீரர்கள் அவசரகால நடைமுறையின்படி தரைத்தளத்தில் இருந்த தீயணைப்பு வாகனத்திலிருந்து குழாய்களை நேரடியாக மேல்தளத்திற்கு எடுத்துச் சென்று தீயை அணைத்தனர். இந்த நடைமுறை, அவசர சூழ்நிலைகளுக்காக தீயணைப்பு வீரர்கள் வழக்கமாகப் பயிற்சி பெறும் செயல்முறையாகும் என்று SCDF விளக்கியுள்ளது.

சம்பவம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதற்கட்ட ஆய்வில், உலர் தீயணைப்புக் குழாயின் ஒரு பகுதியில் இருந்த இணைப்பு கழன்றதால் போதுமான நீர் அழுத்தம் கிடைக்கவில்லை என ஹாலந்துபுக்கிட் பாஞ்சாங் நகர மன்றம் தெரிவித்துள்ளது. தற்போது அந்த கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளதுடன், ஆகஸ்ட் 2-ஆம் தேதி SCDF அமைப்பைச் சோதனை செய்துள்ளது.

மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க தங்களது கட்டுப்பாட்டில் உள்ள மற்ற HDB கட்டிடங்களிலும் உலர் தீயணைப்புக் குழாய்கள் ஆய்வு செய்யப்படும் என்றும், பராமரிப்பு மற்றும் சோதனை நடைமுறைகள் மேலும் வலுப்படுத்தப்படும் என்றும் நகர மன்றம் தெரிவித்துள்ளது.

தீ விபத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காயமடைந்த இரண்டு தீயணைப்பு வீரர்களில் ஒருவர் மருத்துவமனையில் இருந்து ஏற்கனவே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக SCDF தெரிவித்துள்ளது.