ஸ்கூட் விமானம் குறித்த இணையத்தில் பொய் பதிவு..!! 20 வயது இளைஞருக்கு நீதிமன்ற உத்தரவு!
சிங்கப்பூர்: சாங்கி விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த ஸ்கூட் விமானத்தை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக இணையத்தில் பொய்ச் செய்தி வெளியிட்ட, 20 வயதுடைய ரைக்கஸ் டான் காய்(Rykes Tan Zhi Kai) இளைஞருக்கு இன்று (ஆகஸ்ட் 6) நீதிமன்றம் நன்னடத்தைக் கண்காணிப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது.
கடந்த 2025 ஜூன் 7ஆம் தேதி நள்ளிரவுக்குச் சற்று முன்பாக, தைவான் செல்லவிருந்த ரைக்கல் டான், சாங்கி விமான நிலையத்தின் முனையம் 1 இன் (Terminal 1) காத்திருப்பு அறையில் இருந்தார்.
அப்போது, தான் ஏறவிருந்த ஸ்கூட் விமானத்தைப் படம் பிடித்து,தனது தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “நான் இந்த விமானத்தை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இது குறித்து காவல்துறைக்கு பெயர் தெரியாத ஒருவர் கொடுத்த தகவலின் பேரில், சீனா மற்றும் கிரீஸ் நாடுகளுக்குப் புறப்படவிருந்த 3 ஸ்கூட் விமானங்களை தீவிர பாதுகாப்புச் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன.
அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டைதை அடுத்து, 1 ஆண்டு.நன்னடத்தைக் கண்காணிப்புடன் சேர்த்து, தினமும் இரவு 10 மணி முதல் 6 மணி வரை அவர் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும்,90 மணி நேர சமூகச் சேவை செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் அவரது நன்னடத்தைக்கு உத்தரவாதமாக அவரது பெற்றோர் $5,000 பிணைப்பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளனர்.