DBS பெயரில் புதிய மோசடி..! 66 வயது நபரின் தொலைபேசியை கட்டுப்படுத்திய கும்பல்!

சிங்கப்பூரில் 66 வயது நபர் ஒருவர் மோசடி கும்பலின் வலையில் சிக்கியதைத் தொடர்ந்து, அவரது கைப்பேசி தொலைதூரத்தில் இருந்து கட்டுப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் புகார் பெற்றுள்ளதாகவும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் செப்டம்பர் 22ஆம் தேதி இரவு தொடங்கியதாக அந்த நபரின் மகள் தெரிவித்தார். சமூக வலைத்தளத்தில் நீர்விளையாட்டு பயிற்சி தொடர்பான விளம்பரத்தைப் பார்த்த அவரது மனைவி, அதில் தந்தையின் தொலைபேசி எண்ணை பதிவு செய்துள்ளார். பின்னர் ஒரு பெண் அவரைத் தொடர்புகொண்டு, பயிற்சியில் பதிவு செய்வதற்காக தொலைபேசியில் சில அமைப்புகளை மாற்றச் செய்ததுடன், “Water Fitness” என்ற செயலியையும் பதிவிறக்கம் செய்யச் செய்ததாக கூறப்படுகிறது.
செயலியை நிறுவிய பின்னர், கைப்பேசி வழக்கத்திற்கு மாறாக சூடாகுதல், செயலிகள் தானாக திறந்து மூடுதல் மற்றும் வங்கி செயலியை பயன்படுத்த முடியாத நிலை போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
சில நாட்களுக்குப் பிறகு, DBS வங்கியின் மோசடி தடுப்பு பிரிவிலிருந்து வந்ததாகக் கூறப்படும் குறுஞ்செய்தி ஒன்று அவருக்கு வந்துள்ளது. அவரது வங்கிக் கணக்கில் S$50,000 சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனை நடந்துள்ளதாகவும், குறிப்பிட்ட தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளுமாறும் அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது.
அந்த எண்ணைத் தொடர்புகொண்டபோது தனிப்பட்ட தகவல்களை வழங்குமாறு கேட்கப்பட்டதாகவும், அவர் அதன்படி தகவல்களை உள்ளிடாத நிலையிலும், அவரது கைப்பேசி திடீரென தொலைதூரத்தில் இருந்து கட்டுப்படுத்தப்பட்டதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். திரை முடக்கப்பட்டதுடன், கேமரா மின்விளக்கும் தானாக இயங்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து குடும்பத்தினர் உடனடியாக கைப்பேசியை அணைத்துள்ளனர். பின்னர் DBS வங்கியைத் தொடர்புகொண்டு விசாரித்தபோது, அந்தக் குறுஞ்செய்தி வங்கியிடமிருந்து அனுப்பப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. வங்கிக் கணக்கைச் சரிபார்த்ததில் பணம் எதுவும் திருடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
DBS வங்கி, வங்கி சமூக வலைத்தளங்கள் அல்லது தகவல் தொடர்பு செயலிகள் மூலம் வாடிக்கையாளர்களைத் தானாகத் தொடர்புகொள்ளாது என்று எச்சரித்துள்ளது. சந்தேகத்திற்கிடமான குறுஞ்செய்திகள், இணைப்புகள் அல்லது தொலைபேசி அழைப்புகள் வந்தால் அவற்றை நம்பாமல், அதிகாரப்பூர்வ வழிகளில் வங்கியைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சந்தேகம் ஏற்பட்டால் DBS அதிகாரப்பூர்வ மோசடி தடுப்பு உதவி எண்ணான 1800 339 6963-ஐ தொடர்புகொள்ளலாம்.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
