சிங்கப்பூரில் போலீஸாரை நோக்கி எச்சில் துப்பிய ஆஸ்திரேலியர்.!! நீதிமன்றம் கொடுத்த தண்டனை என்ன?

சிங்கப்பூரில் போலீஸாரை நோக்கி எச்சில் துப்பிய ஆஸ்திரேலியர்.!! நீதிமன்றம் கொடுத்த தண்டனை என்ன?

சிங்கப்பூரில் சாங்கி விமான நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டு, போலீஸ் அதிகாரிகளை அவதூறாகப் பேசி மிரட்டிய ஆஸ்திரேலிய ஆடவர் ஒருவருக்கு 5 மாதங்கள் மற்றும் 6 வாரங்கள் சிறைத்தண்டனையும், S$5,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

52 வயதான மோரிஸ் டேவிட் (Morris David), இந்தோனேசியாவின் பாலி தீவிலிருந்து சிங்கப்பூர் வழியாக ஆஸ்திரேலியாவுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார். கடந்த ஜூலை 16ஆம் தேதி, சாங்கி விமான நிலையத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கான கட்டணத்தைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதால் அவர் அதிருப்தியடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் கிரிஸ்ஃப்ளையர் கோல்ட் (KrisFlyer Gold) ஓய்வறையைப் பயன்படுத்துவதற்கான தகுதி குறித்து ஊழியர்கள் கேள்வி எழுப்பியபோதும் அவர் ஆத்திரமடைந்தார். இதையடுத்து, ஊழியர்களிடம் தகாத வார்த்தைகளைப் பேசியதுடன், போலீஸாரையும் அவதூறாகப் பேசி மிரட்டியுள்ளார்.

பின்னர் சாங்கி பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு, பாதுகாப்புக் காரணங்களுக்காகக் கைகளில் கட்டுப்பாட்டுக் கருவிகள் பொருத்தப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த அவர், பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகளை நோக்கிப் பலமுறை எச்சில் துப்பியதுடன், இரு அதிகாரிகள் இருந்த திசையில் சிறுநீர் கழித்துள்ளார்.

மேலும், ஒரு போலீஸ் அதிகாரியின் கழுத்தைப் பிடிப்பதாக மிரட்டியதோடு, மற்றொரு அதிகாரியைக் கடிக்கவும் முயன்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் சுமார் 38 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்த குற்றங்களில் அவர் ஈடுபட்டதாக அரசுத் தரப்பு சுட்டிக்காட்டியது. குறிப்பாக, மருத்துவமனையில் சுமார் ஏழு மணி நேரம் போலீஸ் அதிகாரிகளைத் தொடர்ந்து அவமதித்ததும், அவர்கள் மீது எச்சில் துப்பியதும் கடுமையான செயல்கள் என வாதிடப்பட்டது.

இதையடுத்து, அவருக்கு 8 மாதங்கள் மற்றும் ஒரு வாரம் சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என அரசுத் தரப்பு கோரியது. ஆனால், நீதிமன்றம் அவருக்கு 5 மாதங்கள் மற்றும் 6 வாரங்கள் சிறைத்தண்டனையையும் S$5,000 அபராதத்தையும் விதித்தது.

அபராதத்தைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக இரண்டு வாரங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.