தம்பனீஸ் விபத்தில் பெற்றோரை இழந்த 6 வயது சிறுவன்... S$380,000-ஐ கடந்த நிதி திரட்டல்!

சிங்கப்பூரின் தம்பனீஸ் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் பெற்றோரை இழந்த ஆறு வயது சிறுவனுக்கு உதவுவதற்காக முன்னெடுக்கப்பட்ட நிதி திரட்டும் முயற்சிக்கு பொதுமக்கள் அமோக ஆதரவு அளித்து வருகின்றனர். இதுவரை 9,600-க்கும் மேற்பட்டோர் நன்கொடை வழங்கியுள்ள நிலையில், திரட்டப்பட்ட தொகை S$380,000-ஐ (சுமார் ரூ.38 லட்சம்) கடந்துள்ளது.
கடந்த அக்டோபர் 29ஆம் தேதி இரவு தம்பனீஸ் அவென்யூ 12 பகுதியில் இரண்டு கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்ட விபத்து நிகழ்ந்தது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 24 வயதுடைய தம்பதியினர் இருவரும் உயிரிழந்தனர். இந்தத் தம்பதியினருக்கு ஆறு வயதில் ஒரு மகன் உள்ளார். மேலும், விபத்தில் உயிரிழந்த பெண் ஒரு மாதக் கர்ப்பிணியாகவும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், உயிரிழந்த ஆணின் உறவினர் ஒருவர், சிறுவனின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு Give.Asia இணையதளத்தின் மூலம் நிதி திரட்டும் முயற்சியைத் தொடங்கினார்.
நிதி திரட்டலைத் தொடங்கிய உறவினர், உயிரிழந்த ஆண் சிறுவயதிலேயே தனது பெற்றோரை இழந்தவர் என்றும், உறவினர்களின் பராமரிப்பில் வளர்ந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். தற்போது அவரது மகனும் பெற்றோர் இருவரையும் இழந்து நிற்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்
திரட்டப்படும் நிதி முழுவதும் சிறுவனின் அன்றாட வாழ்க்கைச் செலவுகள், கல்வி, மருத்துவப் பராமரிப்பு மற்றும் எதிர்காலத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தேவையான சட்ட மற்றும் வங்கி நடைமுறைகள் முடிந்த பின்னர், சிறுவனின் பெயரில் தனிப்பட்ட சேமிப்புக் கணக்கு ஒன்றை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
தற்போது சிறுவன் உயிரிழந்த தாயின் குடும்பத்தினரின் பராமரிப்பில் இருந்து வருகிறார். அவருக்கான சட்டப்பூர்வ பாதுகாவலர் தொடர்பான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிதி திரட்டும் முயற்சிக்கு பலரும் தாராளமாக நன்கொடை வழங்கி வருகின்றனர். அதிகபட்சமாக ஒரே நபர் S$5,000 நன்கொடையாக வழங்கியுள்ளார். சிலர் மாதந்தோறும் தொடர்ந்து நன்கொடை வழங்கவும் முன்வந்துள்ளனர்.
பெற்றோரின் அன்பையும் அரவணைப்பையும் எந்தத் தொகையாலும் ஈடுசெய்ய முடியாது என்றாலும், அந்தச் சிறுவனின் எதிர்காலம் பாதுகாப்பாக அமையவும், அவனது கல்வி மற்றும் வளர்ச்சிக்கு ஆதரவு கிடைக்கவும் பொதுமக்கள் ஒன்றிணைந்து உதவி வருகின்றனர்.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
