EV ஆர்வம் சிங்கப்பூரில் உச்சம்…!!சார்ஜிங் தான் பெரிய சவாலா..?
சிங்கப்பூர்: மின்சார வாகனங்களை ஓட்டுவதன் முக்கிய நன்மைகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் செலவு சேமிப்புமாகும் என்று ஷெல் நடத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இதில் பங்கேற்ற 15,000 பேரில், சிங்கப்பூரைச் சேர்ந்த 400 ஓட்டுநர்களும் இடம்பெற்றனர்.
கணக்கெடுப்பின்படி, உள்ளூர் மின்சார வாகன ஓட்டுநர்கள் இளையவர்கள்; அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் 34 வயதிற்குக் குறைவானவர்கள். பிளக்-இன் ஹைப்ரிட் மின்சார வாகனங்கள் (PHEV) சிங்கப்பூரில் அதிகம் காணப்படுகின்றன. உள் எரிப்பு இயந்திர வாகனங்களைப் பயன்படுத்தும் ஓட்டுநர்களில் பாதிக்கு மேற்பட்டோர் அடுத்த வாகனமாக மின்சார வாகனத்தை தேர்வு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், சார்ஜிங் நெட்வொர்க் குறித்த அறிவின்மை மற்றும் அதிக விலை போன்றவை இன்னும் முக்கிய தடைகளாக உள்ளன. தள்ளுபடிகள், முன்னுரிமைக் கொள்கைகள் மற்றும் பரந்த சார்ஜிங் உள்கட்டமைப்பு ஆகியவை மின்சார வாகனங்களுக்கு மாறுவதில் முக்கிய பங்காற்றும் என்று ஷெல் சிங்கப்பூரின் பொது மேலாளர் டோங் ஷிவென் தெரிவித்துள்ளார்.
அவரின் கூற்றுப்படி, பெரும்பாலான உரிமையாளர்கள் வீட்டிலேயே சார்ஜ் செய்ய முடியும்; ஆனால், ஒரு பங்கு ஓட்டுநர்கள் இன்னும் பொது சார்ஜிங் வசதிகளை நம்புகின்றனர். ஹோட்டல்கள், மால்கள், மருத்துவமனைகள் போன்ற இடங்களில் சார்ஜிங் வசதிகளை விரிவுபடுத்துவது அவசியம் எனவும் அவர் கூறினார்.
சார்ஜிங் நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு வசதியான அனுபவம் வழங்கும் நோக்கில், சேவை நிலையங்களில் கஃபே, கூட்ட அறை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பும் சேவை தரமும் நிறுவனத்தின் முன்னுரிமைகளாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.