ரெட்ஹில் பகுதியில் இயங்கி வந்த மழலையர் பள்ளி மூடப்படுகிறதா..??
சிங்கப்பூர்:ரெட்ஹில் பகுதியில் இயங்கி வந்த “ஹெல்தி ஸ்டார்ட்” மழலையர் பள்ளி இந்த ஆண்டு இறுதியில் மூடப்பட உள்ளது. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்காக 2002ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பள்ளி, மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்ததன் காரணமாக செயல்பாடுகளை நிறுத்துகிறது என்று பியாண்ட் சோஷியல் சர்வீசஸ் தெரிவித்துள்ளது.
துஷ்பிரயோகத்தால் உயிரிழந்த நான்கு வயது சிறுமி மேகன் குங் படித்ததும் இதே பள்ளியில்தான்.பள்ளி ஊழியர்கள் சிறுமிக்கு ஏற்பட்ட காயங்களை கவனித்து உதவ முயன்றதாகவும் தகவல் வெளியானது.
2018ஆம் ஆண்டு 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்த நிலையில், தற்போது 14 பேர் மட்டுமே கல்வி கற்கின்றனர்.வீட்டுவசதி மாற்றம், குடும்ப இடமாற்றம் மற்றும் அருகிலுள்ள மலிவு விலை பாலர் பள்ளிகள் அதிகரித்திருப்பதே மாணவர் சேர்க்கை குறைவுக்குக் காரணமாக அமைந்துள்ளது.
சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிக்கையின்படி,குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் குழந்தைகள் பள்ளியில் சேர்ந்திருந்தாலும், வருகை சீராக இல்லை.போக்குவரத்து சிரமம், பொருளாதார அழுத்தம், ஒழுங்கற்ற வேலை நேரம் போன்றவை இதற்குக் காரணம் என்று பியாண்ட் சோஷியல் சர்வீசஸ் தெரிவித்துள்ளது.
நிறுவனம் கூறியதாவது, “ஹெல்தி ஸ்டார்ட்” மழலையர் பள்ளி மூடப்பட்டாலும், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை ஆதரிக்கும் எங்கள் பணிகள் தொடரும். சமூகத்துடன் இணைந்து குழந்தைகளுக்கான புதிய மேம்பாட்டு திட்டத்தை உருவாக்க சமூகத்துடன் இணைந்து செயல்படுவோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.