தீ வேகமாகப் பரவ காரணமாக கட்டிடத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் தரமற்றவையாக இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கட்டிடத்தின் வெளிப்புறச் சுவர்களில் பிளாஸ்டிக் தாள்கள், நீர்ப்புகா தார்பாய், பாதுகாப்பு வலைகள் போன்றவை இருந்தன.இவை தீ எதிர்ப்பு தரநிலைகளை பூர்த்தி செய்யாதவையாக இருப்பதாக தீயணைப்பு துறை கண்டறிந்தது.
மேலும், சில லிஃப்ட் லாபிகள் விரிவடையும் நுரை (expanding foam) கொண்டு மூடப்பட்டிருந்தன. இது எரியக்கூடியதுடன், தீ பரவலை வேகப்படுத்தும் தன்மையும் கொண்டது. இதுவே தீயை வேகமாகப் பரவ காரணமாக இருந்திருக்கலாம் என்று விசாரணை நடந்து வருகிறது.
தீப்பிழம்பு எதிர்ப்பு வலைகள் மற்றும் கேன்வாஸ் போன்ற பொருட்களைப் பயன்படுத்த வேண்டிய வழிகாட்டுதல்கள் இருந்தாலும், அவை கட்டாய சட்டம் அல்லாததால், ஒப்பந்ததாரர்கள் மலிவு பொருட்களைத் தேர்வு செய்திருக்கலாம் என நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.
தீ ஏற்பட்ட இடம் குப்பைகள் மற்றும் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களால் நிரம்பியிருந்தது. வெல்டிங் பணிகளின் தீப்பொறிகள் இப்பொருட்களால் தீப்பிடித்திருக்கலாம் என நிபுணர்கள் கூறினர்.
மேலும், 40 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் “புகைபோக்கி விளைவு” (stack effect) மற்றும் பலத்த காற்று தீயை வேகமாகப் பரப்பியதாகவும், அணைப்பது மிகவும் கடினமாக இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.