4 வயது சிறுமி மேகன் குங் மரண வழக்கு..!! உடலை அகற்ற உதவிய பெண் குற்றத்தை ஒப்புக்கொண்டார்!

4 வயது சிறுமி மேகன் குங் மரண வழக்கு..!! உடலை அகற்ற உதவிய பெண் குற்றத்தை ஒப்புக்கொண்டார்!

சிங்கப்பூரில் நான்கு வயது சிறுமி மேகன் குங் (Megan Khung) உயிரிழந்த வழக்கில், சிறுமியின் உடலை அகற்ற உதவியதுடன், அவரைத் துன்புறுத்தும் செயல்களைத் தடுக்கத் தவறிய பெண் ஒருவர் நீதிமன்றத்தில் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளார்.

36 வயதான Nouvelle Chua Ruoshi, அக்டோபர் 26ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி, குழந்தையைத் துன்புறுத்துவதற்குச் சதித்திட்டம் தீட்டியது, உடலைச் சட்டவிரோதமாக அகற்றியது மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றம் உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

மேகன் குங், தனது தாயான Foo Li Ping மற்றும் அவரது காதலரான Wong Shi Xiang ஆகியோரின் பராமரிப்பில் இருந்தபோது, நீண்டகாலமாகத் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவங்களில் Nouvelle Chua பலமுறை நேரில் இருந்ததாகவும், சில சம்பவங்களைத் தனது கைப்பேசியில் காணொளியாகப் பதிவு செய்ததாகவும் கூறப்பட்டது. இருப்பினும், சிறுமியைப் பாதுகாக்கும் வகையில் அவர் தலையிடவில்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், Wong Shi Xiang சிறுமியின் வயிற்றுப் பகுதியில் தாக்கியதைத் தொடர்ந்து மேகன் உயிரிழந்தார்.

சிறுமி உயிரிழந்த பின்னர், உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்காமல், அவரது தாயும் காதலரும் உடலை மறைக்க முயன்றனர். இந்தச் செயல்களுக்கு Nouvelle Chuaவும் உதவியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

2020ஆம் ஆண்டு மே மாதம், சிறுமியின் உடல் எரிக்கப்பட்டு, பின்னர் சாம்பல் கடலில் கரைக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. சிறுமியின் உடல் எச்சங்களையும், உடலை எரிக்கப் பயன்படுத்தப்பட்ட உலோகப் பீப்பாயையும் காவல்துறையினர் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.

சிறுமியின் தந்தை 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கில் தொடர்புடைய மூவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் சிறுமியின் தாயான Foo Li Ping-க்கு 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அவரது காதலரான Wong Shi Xiang-க்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 17 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

தற்போது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள Nouvelle Chuaவுக்கான தண்டனை விவரம் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.