சிங்கப்பூர்: இந்த ஆண்டின் சிங்கப்பூர் இரவு விழா (Singapore Night Festival) வண்ணமயமான கலை நிறுவல்களால் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கிறது.முக்கியமாக இரண்டு நிறுவல்கள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. “ஸ்கை கேஸ்டில்” (Sky Castle) மற்றும் “ஸ்லோ கம்போங்” (Slow Kampong).
கேத்தே கிரீனில் அமைந்துள்ள “ஸ்கை கேஸ்டில்” எண்ணற்ற பின்னிப்பிணைந்த வண்ண வளைவுகளால் ஆனது. பார்வையாளர்கள் அதன் வழியாக செல்லும்போது ஒளி, நிறம் மற்றும் இசை ஒன்றாக கலந்து கனவுகளின் உலகத்தை உருவாக்குகின்றன. இந்தப் படைப்பை ஆஸ்திரேலிய கலை மற்றும் தொழில்நுட்ப ஸ்டுடியோ ENESS வடிவமைத்துள்ளது.
மறுபுறம், கேபிடல் தியேட்டர் முன்பகுதியில் உள்ள “ஸ்லோ கம்போங்”, தெருக் கலைஞர்கள் யோக் & ஷெரியோவின் படைப்பு ஆகும்.இது பார்வையாளர்கள் மெதுவாகி உள்ளூர் சூழலால் நிரம்பிய அமைதியான இடத்தை அனுபவிக்கச் செய்யும் விதமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
தீவு இரவு – 80க்கும் மேற்பட்ட அனுபவங்கள்:
2008இல் தொடங்கிய சிங்கப்பூர் மிட்சம்மர் நைட் ஸ்கை விழா, இந்த ஆண்டு சுதந்திரத்தின் 60 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு “தீவு இரவு” என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது.இதில் 80க்கும் மேற்பட்ட ஆழமான அனுபவங்கள் இடம்பெறுகின்றன.
“சிங்கப்பூரர்கள் தீவுவாசிகள். தீவுவாசிகள் ஓய்வு எடுத்து வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள். அதையே நாங்கள் கொண்டாடுகிறோம்” என திட்ட இயக்குநர் காசிம் கரீம் முன்னோட்ட நிகழ்வில் கூறினார்.
புதுமை & பொறுப்பை நினைவூட்டும் ‘சைபர் ஸ்வார்டுஃபிஷ் 2.0
ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள பிளாசா சிங்கப்பூராவில், உள்ளூர் கலைஞர் யாங் டெரோங் தனது “சைபர் ஸ்பார்ட்டுஃபிஷ் 2.0” படைப்பை வெளியிட்டுள்ளார்.பழைய மொபைல், கம்பிகள், கணினி பாகங்கள் போன்ற மின்னணு கழிவுகளை இணைத்து உருவாக்கப்பட்ட இந்த எதிர்கால வாள்மீன், செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியுடன் அதிகரிக்கும் டிஜிட்டல் கழிவுகளின் அபாயத்தை நினைவூட்டுகிறது.
“புதுமை என்பது பொறுப்பு. கழிவுகளை எப்படி கையாள்வது என்பதை மீண்டும் சிந்திக்க வேண்டிய நேரம் இது” என கலைஞர் தெரிவித்துள்ளார்.
விழா விவரங்கள்:
இம்முறை நிகழ்வை ஹெரிடேஜ் சிங்கப்பூர் (HeritageSG) முதன்முறையாக ஏற்பாடு செய்கிறது. நிகழ்வு நாட்கள்: ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 6 வரை இடம்: பிராஸ் பாசா & புகிஸ் பகுதிகள்