அங் மோ கியோவில் அதிகரிக்கும் தீ விபத்து..!! காரணம்..??

அங் மோ கியோவில் அதிகரிக்கும் தீ விபத்து..!! காரணம்..??

சிங்கப்பூர்:சிங்கப்பூரின் அங் மோ கியோ பகுதியில் சமீப காலமாக குப்பைத் தொட்டிகளில் தீப்பிடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக நகர சபை தெரிவித்துள்ளது. இதையடுத்து, குடியிருப்பாளர்கள் தங்கள் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தி, தீ அபாயத்தைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து அங் மோ கியோ நகர சபை தெரிவித்ததாவது, பெரும்பாலான தீ விபத்துகள் HDB குடியிருப்பு பகுதிகளில் நடந்ததாகவும்,டிசம்பர் மாதத்தில் மட்டும் ஐந்து தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக கூறியது.

இந்த சம்பவங்களுக்குப் பின்னர் பாதிக்கப்பட்ட குப்பைத் தொட்டிகள் சரிசெய்யப்பட்டுள்ளதாகவும் நகர சபை கூறியுள்ளது.

இந்த தீ விபத்துகளில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், பெரும்பாலான சம்பவங்களை குப்பைகளை முறையாக அப்புறப்படுத்துவதன் மூலம் தவிர்க்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக, சிகரெட் துண்டுகள், தீக்கனல்கள், சூடான அல்லது புகைந்து கொண்டிருக்கும் பொருட்கள், பெயிண்ட் அல்லது மண்ணெண்ணெய் போன்ற எரியக்கூடிய திரவங்களை குப்பைத் தொட்டிகளில் வீசக்கூடாது என குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிறிய பொருட்கள்கூட தீ விபத்துக்கு காரணமாக அமையக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். குப்பைத் தொட்டியில் தீ ஏற்பட்டால், குடியிருப்பாளர்கள் பதற்றமடையாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நகர சபை அறிவுறுத்தியுள்ளது.

குப்பைத் தொட்டியில் தண்ணீர் ஊற்ற ஒரு வாளி அல்லது கரண்டியை பயன்படுத்தலாம். மாற்றாக, தண்ணீர் நிரப்பிய பிளாஸ்டிக் பையை இறுக்கமாகக் கட்டி தீயின் மீது வைக்கலாம். புகை முழுமையாக நிற்கும் வரை இந்த செயல்முறையை மீண்டும் செய்ய வேண்டும். அதன் பின்னர் நகர சபைக்கு தகவல் அளிக்க வேண்டும்.

நகர சபை தெரிவித்ததன்படி, குப்பைத் தொட்டிகளில் ஏற்படும் தீ விபத்துகள் பொதுவாக சிறிய அளவில் இருக்கும் மற்றும் பெரும்பாலும் புகை மட்டும் ஏற்படும்.அவை பரவுவதில்லை.

சிறிய தீ விபத்துகளுக்கு முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பது, நிலைமை மோசமடைவதைத் தடுப்பதுடன், வீடுகள் மற்றும் அண்டை வீட்டாரின் பாதுகாப்பையும் உறுதி செய்யும். இதன் மூலம், மிகவும் அவசரமான மற்றும் உயிருக்கு ஆபத்தான சம்பவங்களை கையாள அவசரகால வளங்களை பயன்படுத்துவதற்கும் உதவியாக இருக்கும் என நகர சபை வலியுறுத்தியுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK