சிங்கப்பூரில் 2 முக்கிய Hawker Centre-கள் மூடல்..! எப்போது முதல்? எத்தனை நாட்களுக்கு?
சிங்கப்பூரில் உள்ள இரண்டு உணவங்காடி மையங்கள் (Hawker Centres) அடுத்த வாரம் முதல் கட்டம் கட்டமாக மூடப்பட்டு, சுமார் 3 மாதங்களுக்கு புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
தோ பாயோ 7-வது லேன் சந்தை மற்றும் உணவங்காடி: செப்டம்பர் 14 முதல் டிசம்பர் 13 வரை இந்த உணவங்காடி மூடப்படும். புதுப்பிப்பு பணிகளில், மழைநீர் உள்ளே புகுவதைத் தடுக்கும் வகையில் கூரையின் வடிவமைப்பு மேம்படுத்துதல், மேசைகள் மற்றும் நாற்காலிகளை மாற்றுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மேலும், கழிப்பறை முழுமையாக அகற்றப்பட்டு புதிதாக கட்டப்படுவதுடன், வடிகால் தொடர்பான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட உள்ளது.
கிளமெண்டி வெஸ்ட் 2-வது தெரு, பிளாக் 726: இங்குள்ள உணவங்காடி மற்றும் சந்தையும் செப்டம்பர் 14 முதல் டிசம்பர் 27 வரை புதுப்பிப்பு பணிகளுக்காக மூடப்படும். சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கு மீண்டும் பெரிய அளவில் புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தரைத்தளம், மேசை மற்றும் நாற்காலிகள், கழிப்பறை டைல்ஸ், மின்சார வசதிகள், மின்விசிறிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. மேலும், பறவைகள் அமர்வதைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன.
புதுப்பிப்பு பணிகள் முடிந்த பிறகு, சுத்தமான மற்றும் மேம்படுத்தப்பட்ட சூழலில் மக்கள் உணவருந்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சாங்கி வில்லேஜ் உணவங்காடி மையமும் அக்டோபர் தொடக்கத்தில் இரண்டு வாரங்களுக்கு சிறிய அளவிலான புதுப்பிப்பு பணிகளுக்காக மூடப்பட உள்ளது.
சிங்கப்பூர் உணவங்காடிகளுக்கு செல்லும் பொதுமக்கள், மேற்கண்ட மூடல் காலத்தை கவனத்தில் கொள்ளவும்.