பேஷார் போக்குவரத்து அப்டேட்: பிடோக் சவுத்தில் புதிய பேருந்து நிலையம்..!!
சிங்கப்பூரில் புதிய பேஷார் வட்டாரத்துக்கு வசதியாக, தாம்சன் – ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையில் வரவிருக்கும் பீடோக் சவுத்தில் MRT நிலையத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட பேருந்து நிலையம் கட்டப்பட உள்ளது.
கடந்த மார்ச் மாதம் 30-ம் தேதி அன்று நகர சீரமைப்பு ஆணையம் வெளியிட்ட ஆவணங்களின்படி, இந்த வட்டாரத்துக்கான அக்கம்பக்க மையமாகத் திகழக்கூடிய குடியிருப்பு மற்றும் வர்த்தக மேம்பாட்டு பகுதிகளுக்குள் இந்த புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும்.
மேம்பாட்டு திட்டத்தில் உணவகங்கள் மற்றும் கடைகள் போன்ற சில்லறை வர்த்தக வசதிகள் இடம்பெறும் எனவும், அதிகபட்சமாக 1280 வீடுகள் இந்த திட்டத்தின் கீழ் இருக்கும் எனவும் ஆணையம் தெரிவித்துள்ளது. இன்ன திட்டமானது வீடமைப்பு வளர்ச்சி கழக வீடுகளா அல்லது தனியார் வீடுகளா என்பதை ஆணையம் தெரிவிக்கவில்லை.
இது போன்ற பேரளவிலான குடியிருப்பு மற்றும் வர்த்தக மேம்பாட்டு திட்டங்கள் நிறைவடைவதற்கு 7 ஆண்டுகள் வரை தேவைப்படும்.
சுமார் ஒன்றரைக் காற்பந்து திடல்கள் அளவிலான, குறைந்தது 7,700 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக 7 பேருந்து நிறுத்துமிடங்கள் மற்றும் சில கடைகள், உணவகங்கள் ஆகியவை கட்டப்பட உள்ளன.
தற்போதுள்ள அப்பர்ட் ஈஸ்ட் கோஸ்ட் பேருந்து நிலையம் புதிய பேருந்து நிலையத்துக்கு மாற்றப்படும் எனவும் ஆணையம் தெரிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டின் பிற்பகுதிக்குள் திறக்கப்பட உள்ள பிடோக் சவுத் மற்றும் சுங்கை பிடோக் MRT நிலையங்களுடன் இணைந்து, இது போக்குவரத்து இணைப்பை முழுமையாக்கும் என நாடாளுமன்ற உறுப்பினரும், கலாச்சார, சமூக இளையர்த் துறை அமைச்சரும் மற்றும் மனிதவளத் துணை அமைச்சருமான திரு.தினேஷ் வாசு தாஸ் தெரிவித்துள்ளார்.