சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பிடோக் சமூக மையத்தில் நடைபெற்ற சர்வதேச புலம்பெயர்ந்த தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு விழாவில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் சிங்கப்பூரர்களும் ஒன்றிணைந்து ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையை வலியுறுத்தினர். இந்நிகழ்வில் சிங்கப்பூரின் கலாச்சார ஒற்றுமையைக் குறிக்கும் வகையில் இந்திய நியோன்யா இரவு உணவு வழங்கப்பட்டது.
உணவின் வழியாக ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்கில் பங்கேற்பாளர்கள் அனைவரும் ஒரே மேசையில் இணைந்து உணவருந்தினர்.
இந்த விழாவின் சிறப்பாக சிங்கப்பூரின் பன்முக கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் 16 மீட்டர் நீளமுள்ள பட்டிக் ஓவியம் காட்சிப்படுத்தப்பட்டது. தென்கிழக்கு மாவட்ட மேயரும் கலாச்சாரம், சமூகம் மற்றும் இளைஞர் துறை இணையமைச்சருமான தினேஷ், “சிங்கப்பூர் என்பது ஒரு அடையாளம் அல்ல,மாறாக அது பல அடையாளங்களின் சங்கமம் என்று தெரிவித்தார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வீட்டு உதவியாளர்கள் உட்பட எங்கள் வெளிநாட்டு நண்பர்கள் இந்த அடையாளத்தின் முக்கிய அங்கமாக உள்ளனர் என்றார். ஒரு மாதம் நீடிக்கும் சர்வதேச புலம்பெயர்ந்த தொழிலாளர் தின கொண்டாட்டங்கள், சிங்கப்பூரின் பல்வேறு சமூகங்களுக்கிடையேயான ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் நடத்தப்படுகின்றன.