KPE சுரங்கப் பாதையில் சாலை விபத்து..!!

KPE சுரங்கப் பாதையில் சாலை விபத்து..!!

சிங்கப்பூர் : கல்லாங் – பாயா லெபார் விரைவுச் சாலையில் (KPE) ஒரு காரும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று (ஏப்ரல் 15) மாலை சுமார் 6:15 மணி அளவில் கல்லாங் – பாயா லெபார் விரைவுச் சாலையில் இருந்து கடலோர விரைவுச் சாலையை (MCE) நோக்கி செல்லும் வழியில், பான் தீவு விரைவுச்சாலை வெளியேறும் வாயிலுக்கு எதிரே இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்து குறித்த காணொளியானது இணையத்தில் பரவி வருகிறது. அந்தக் காணொளியை LFY என்ற பெயருடைய இணையவாசி ஒருவர், Xiaohongshu என்ற சமூக ஊடகத்தில் பகிர்ந்து உள்ளார்.

மேலும் அந்த நபர் நேர்காணலில் தன் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் வழியில் இந்த விபத்தை பார்த்ததாக கூறியுள்ளார்.

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தரையில் கிடப்பதும், அவருக்கு யாரோ ஒருவர் உதவி செய்வது போலவும் அந்த காணொளியில் தெரிகிறது.

கார் ஓட்டுநர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் சாலையில் கவனமாக வாகனத்தை ஓட்டுவார்கள் என்று நம்புவதாகவும், விபத்துக்கள் நடப்பதை பார்க்கும்போது அது மிகவும் வருத்தமாக இருக்கிறது எனவும் இந்த காணொளிக்கு இணையவாசிகள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை இந்த விபத்து குறித்து கூறியதாவது:
விபத்தில் காயம் அடைந்த, 34 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ராஃபிள்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காககொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்தனர்.

மருத்துவமனைக்கு செல்லும் பொழுது அவர் சுயநினைவுடன் இருந்ததாகவும், தற்போது காவல்துறையின் விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த விபத்து குறித்த விசாரணை இன்னும் நடைபெறுவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.