சிங்கப்பூரில் 12 மணி நேரத்தில் அடுத்தடுத்து 2 கோர விபத்துகள்..!! 39 பேர் மருத்துவமனையில் அனுமதி!!

மேற்கு சிங்கப்பூரில் வெறும் 12 மணி நேரத்திற்குள் கனரக வாகனங்கள் சம்பந்தப்பட்ட இரண்டு பெரிய சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன.
இந்த இரு விபத்துகளிலும் பேருந்துகள், லாரிகள் மற்றும் டிப்பர் லாரிகள் மோதிக்கொண்டதில் மொத்தம் 39 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அனைவரும் சுயநினைவுடன் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துகள் தொடர்பாக ஒரு லாரி ஓட்டுநர் மற்றும் ஒரு டிப்பர் லாரி ஓட்டுநர் ஆகியோர் காவல்துறையின் விசாரணைக்கு உதவி வருகின்றனர்.
முதல் விபத்து கடந்த 5ஆம் தேதி அதிகாலை சுமார் 5.50 மணியளவில், கடலோர விரைவுச்சாலையை (MCE) நோக்கிச் செல்லும் ஆயர் ராஜா விரைவுச்சாலையில் (AYE) நிகழ்ந்தது.
இதில் இரண்டு லாரிகளும் ஒரு பேருந்தும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 12 ஆண் பயணிகள் மற்றும் 42 வயதுடைய லாரி ஓட்டுநர் என மொத்தம் 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
காயமடைந்த பயணிகள் 24 முதல் 51 வயதுக்குட்பட்டவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் மூலம் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இணையத்தில் பரவி வரும் காணொளிகளில், விபத்து நடந்த இடத்தில் பல ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதும், காயமடைந்த பலர் சாலையோரத்தில் அமர்ந்திருப்பதும் பதிவாகியுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் 8 பேர் ங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்கும், மற்ற 5 பேர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்தில் தொடர்புடைய 42 வயதான லாரி ஓட்டுநர் காவல்துறையின் விசாரணைக்கு உதவி வருகிறார்.
இதற்கிடையில், இதற்கு முந்தைய நாளான 4ஆம் தேதி இரவு சுமார் 7.30 மணியளவில் துவாஸ் தெற்கு அவென்யூ 9-இல் இருந்து துவாஸ் தெற்கு விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் சாலையிலும் மற்றொரு விபத்து நிகழ்ந்தது. இதில் ஒரு பேருந்து, ஒரு லாரி மற்றும் ஒரு டிப்பர் லாரி ஆகிய மூன்று கனரக வாகனங்கள் சம்பந்தப்பட்டிருந்தன.
இந்த விபத்தில் 45 வயதான லாரி ஓட்டுநர் மற்றும் 25 முதல் 48 வயதுக்குட்பட்ட 25 ஆண் பயணிகள் என மொத்தம் 26 பேர் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும், விபத்தில் தொடர்புடைய 69 வயதான டிப்பர் லாரி ஓட்டுநர் காவல்துறையின் விசாரணைக்கு உதவி வருகிறார்.
சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட காணொளிகளில், டிப்பர் லாரிக்கும் பேருந்துக்கும் இடையில் மற்றொரு லாரி நிறுத்தப்பட்டிருப்பதும், பத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் சாலையின் மையப் பகுதியில் அமர்ந்திருக்க, மருத்துவப் பணியாளர்கள் அவர்களைப் பரிசோதிப்பதும் தெரியவந்துள்ளது.
இந்த இரண்டாவது விபத்தில் காயமடைந்தவர்களில் 10 பேர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கும், 8 பேர் ங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்கும், மேலும் 8 பேர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
தொடர்ந்து 12 மணி நேரத்திற்குள் மேற்கு சிங்கப்பூரில் அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த இரண்டு விபத்துகளால் மொத்தம் 39 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு விபத்துகள் குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
