அமெரிக்காவில் மாணவர் சேர்க்கை பாகுபாடு..!! யேல் பல்கலைக்கழகம் மீது குற்றச்சாட்டு..!!
அமெரிக்காவில் யேல் பல்கலைக்கழக மருத்துவப்பள்ளி மாணவர் சேர்க்கை முறையில் பாகுபாட்டைக் கடைப்பிடித்ததாக அமெரிக்க நீதித்துறை(DOJ) பல்கலைக்கழகம் மீது நேற்று (மே 14) குற்றம் சாட்டியுள்ளது.
சென்ற 8 நாட்களில் மாணவர் சேர்க்கை குறைபாடுகள் குறித்து அதிபர் ட்ரம்பின் அரசாங்கம் அடையாளம் காட்டியுள்ள 2 -வது கல்வி நிலையமாக இந்த யேல் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.
யேல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர் சேர்க்கை விதிமுறைகள் கடுமையாக அமைக்கப்பட்டுள்ளதால் அதன் மீது நம்பிக்கை உள்ளது என்று இந்த குற்றச்சாட்டிற்கு விளக்கம் அளித்துள்ளது.
ஹார்வர்ட், ஸ்டான்ஃபர்ட், டேவிட் கெஃபன், கலிஃபோர்னியா மற்றும் ஓஹாயோ மாநில பல்கலைக்கழகங்கள் போன்ற பல கல்வி நிலையங்களில் இயங்கும் மருத்துவப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முறை குறித்து அமெரிக்க நீதித்துறைக்கு அண்மையில் சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், மாணவர் சேர்க்கை நடைமுறைகளை வெளியிடும்படி ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு எதிராக நீதித்துறை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.
இனம் சார்ந்த மாணவர்கள் சேர்க்கை நடைமுறைகளை 2023 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் நிராகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்படி இருந்தும் பல்கலைக்கழகம் அதைப் பின்பற்றுவதாகப் பொது உரிமைகளுக்கான துணைத் தலைமைச் சட்ட அதிகாரி ஹர்மீட் டிலன் தெரிவித்துள்ளார்.