சிங்கப்பூர்:காசியா கிரசென்ட்டில் சாலை கடக்கும் போது ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பாக,ஒரு நபர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.ஹாரன் அடித்ததைத் தொடர்ந்து தன்னைத் தாக்கியதாக நடித்ததாக அந்த நபர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் 03.01.26 அன்று மதியம் 12.45 மணியளவில் நடைபெற்றதாக SGRV எனும் ஃபேஸ்புக் பக்கம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தில் தொடர்புடைய ஓட்டுநர்,தனது மனைவியுடன் காரில் சென்று அபாகஸ் வகுப்பிலிருந்து குழந்தையை அழைத்து வருகையில் இந்த நிகழ்வு நடந்ததாக கூறினார்.
அவரது கூற்றுப்படி,இரண்டு பாதசாரிகள் சுற்றுப்புறத்தை சரிபார்க்காமல் சட்டவிரோதமாக சாலையைக் கடந்ததால், வாகன வேகத்தை குறைத்து எச்சரிக்கையாக ஹாரன் அடித்துள்ளார்.அதனைத் தொடர்ந்து, அவர்களில் ஒருவர் ஆக்ரோஷமாக வாகனத்தின் அருகே வந்து,வாக்குவாதத்தில் ஈடுபட்டு,தன்னை மோதியது போல் நடித்து கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது.
அவருடன் இருந்த மற்றொரு நபரின் கோரிக்கையின் பேரில் ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டாலும்,காவல்துறைக்கு தகவல் அளிக்கப்படவில்லை.பின்னர்,ஓட்டுநரின் வாகனத்தில் டேஷ்கேம் இருப்பது தெரிய வந்ததும்,பாதசாரிகள் தங்கள் கூற்றுகளை மாற்றிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில், வாகனம் தன்னை மோதியதாக கூறிய நபர், பின்னர் ஹாரன் சத்தத்தால் திடுக்கிட்டு முழங்கால் முறிந்ததாகவும்,அதன் பின் காவல்துறையினர் வந்தபோது வாக்குவாதம் செய்ய திரும்பியபோது கால் முறிந்ததாகவும் மாறுபட்ட விளக்கங்களை அளித்ததாக ஓட்டுநர் கூறினார்.
இந்த முரண்பாடுகள் டேஷ்கேம் காணொளியில் தெளிவாக பதிவாகியுள்ளதாகவும், வாகனத்திற்கும் அந்த நபருக்கும் எந்தவிதமான உடல் தொடர்பும் இல்லையெனவும் அவர் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், போக்குவரத்து விபத்து எதுவும் நடைபெறவில்லை என்பதை உறுதிப்படுத்தினர்.துணை மருத்துவர்களும் அந்த நபருக்கு காயம் எதுவும் இல்லை என்று தெரிவித்த நிலையில்,சில நிமிடங்களில் ஆம்புலன்ஸ் அங்கிருந்து சென்றது.
இந்தச் சம்பவம் காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும், குழந்தைகள் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்வு தங்களுக்கு மன உளைச்சல் மற்றும் உணர்ச்சி பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் ஓட்டுநர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, வீணடிக்கப்பட்ட நேரம் மற்றும் ஏற்பட்ட மன உளைச்சலுக்காக இழப்பீடு கோரி, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.வழக்கில் கிடைக்கும் எந்தவொரு இழப்பீடும் தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.