சிங்கப்பூரில் தொழிலாளர் பற்றாக்குறைக்கு தீர்வு..!! IMDA-வின் புதிய திட்டம் என்ன..??
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் அடுத்த மூன்று ஆண்டுகளில் 500 உள்ளூர் வணிகங்களில் தன்னாட்சி மொபைல் ரோபோக்கள் (Autonomous Mobile Robots – AMRs) பயன்பாட்டை ஊக்குவிக்க ஒரு புதிய திட்டத்தை தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் (IMDA) தொடங்கியுள்ளது.
இந்த “AMRs x Digital Leaders” திட்டம், உள்ளூர் நிறுவனங்களுக்கு டிஜிட்டல் மாற்றத்தை வேகப்படுத்தவும்,புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்கவும் மற்றும் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்தவும் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று IMDA தெரிவித்துள்ளது.
இன்ஃபோமீடியா ஆராய்ச்சி நிறுவனம்,நான்கு துறைகளைச் சேர்ந்த சுமார் 50 டிஜிட்டல் தலைவர்களிடம் நடத்திய ஆய்வில், தன்னாட்சி ரோபோ தொழில்நுட்பத்தை இன்னும் பயன்படுத்தாத 80% நிறுவனங்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன எனத் தெரியவந்தது.
இதில், 80% நிறுவனங்கள் தொழிலாளர் பற்றாக்குறையை சரிசெய்ய இது ஒரு தீர்வாக இருக்கும் என நம்புகின்றன.மேலும் 70% நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பம் உற்பத்தித் திறனை மேம்படுத்தும் என நம்புகின்றன. ஆனால், 65% நிறுவனங்கள் எவ்வாறு இந்த ரோபோக்களை தங்கள் தினசரி செயல்பாடுகளில் ஒருங்கிணைப்பது என்று தெரியாமல் உள்ளன. மேலும் 60% நிறுவனங்கள் எங்கு தொடங்குவது என்று தெரியாமல் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த தொழில்நுட்பத்தை ஏற்கனவே நடைமுறைப்படுத்திய நிறுவனங்கள், பணியாளர் தக்கவைப்பு விகிதம் 22% உயர்ந்தது.மேலும் கட்டுமான மற்றும் சுற்றுச்சூழல் துறைகளில் பணியிட பாதுகாப்பு 25% மேம்பட்டது என தெரிவித்துள்ளன.