80வது சுதந்திர தினம் – இந்தோனேசியாவுக்கு சிங்கப்பூர் வாழ்த்து...!!!

சிங்கப்பூர்: இந்தோனேசியாவின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிங்கப்பூர் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
அதிபர் தர்மன் சண்முகரத்னம், பிரதமர் லாரன்ஸ் வோங் மற்றும் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோர் தனித்தனி வாழ்த்துக் கடிதங்களை இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ மற்றும் வெளியுறவு அமைச்சர் சுகியோனோவுக்கு அனுப்பினர்.
பிரபோவோவுக்கு எழுதிய வாழ்த்துகளில், சுதந்திரத்திற்குப் பிறகு இந்தோனேசியா தேசிய முன்னேற்றத்திலும், பொருளாதார வளர்ச்சியிலும், சர்வதேச அரங்கிலும் சாதித்த முக்கிய முன்னேற்றங்களை தர்மன் மற்றும் லாரன்ஸ் வோங் பாராட்டினர்.
கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி சிங்கப்பூர் தேசிய தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டதற்காக பிரபோவோவுக்கு நன்றி தெரிவித்த அவர்கள், இது இரு நாடுகளின் நெருக்கமான நட்புறவை வெளிப்படுத்துவதாகவும் குறிப்பிட்டனர்.
மேலும், ஆசியான் வழியாக இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த பிரபோவோவுடன் தொடர்ந்து பணியாற்ற ஆவலாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், சுகியோனோவுக்கு எழுதிய கடிதத்தில், இந்தோனேசியா பிராந்திய பொருளாதார வளர்ச்சியை முன்னோக்கிச் செலுத்தும் சக்தியாக மாறியுள்ளது என்றும் சர்வதேச தளத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருவதாகவும் கூறினார். பிரபோவோவின் தலைமையில் இந்தோனேசியா புதிய உயரங்களை எட்டும் என நம்பிக்கை தெரிவித்தார்.
முறைசாரா உச்சிமாநாட்டில் விவாதிக்கப்பட்ட இருதரப்பு முயற்சிகள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, மனித மூலதன மேம்பாடு, பாதுகாப்பு, இணைப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு போன்ற துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் ஆசியான் மற்றும் பிற சர்வதேச மன்றங்களில் இணைந்து செயல்படுவதற்கும் சுகியோனோவுடன் நெருக்கமாக பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார்.
மேலும், சிங்கப்பூர் வருகைக்கு சுகியோனோவையும் அவர் அழைத்துள்ளார்.
Follow us on : click here
WHATSAPP CHANNEL LINK
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan
